கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் விராட்கோலி புகழாரம் + "||" + India win the last 20 ODI against England: Rohit Sharma, Harrdik Pandya Captain Viratole's praise

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் விராட்கோலி புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேப்டன் விராட்கோலி புகழாரம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
பிரிஸ்டல்,

பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டு இருந்தது.


முதலில் ஆடிய இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கம் கண்டாலும், மிடில் மற்றும் கடைசி கட்டத்தில் நமது பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அந்த அணியை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தனது முதல் ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து வெற்றியை சுவைத்தது. ஷிகர் தவான் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 43 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 100 ரன்னுடனும் (56 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன்), ஹர்திக் பாண்ட்யா 33 ரன்னுடனும் (14 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்து அணி 225 முதல் 230 வரை எடுக்கும் என்று ஒரு கட்டத்தில் நாங்கள் நினைத்தோம். பந்து வீச்சாளர்கள் ஆரம்ப சறுக்கலில் இருந்து மீண்டு வந்து பந்து வீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதம் உண்மையிலேயே பெருமை அளிக்கிறது. கேப்டனாக அதனை பார்த்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்து வீச்சு தரம் நம்மிடம் இருக்கிறது. எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம். ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல்-ரவுண்டர். தன்னம்பிக்கை மிக்கவர். அவர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்திய விதம் இளம் வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்நோக்குவதாகும். ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். ரோகித் சர்மா மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பது எல்லோருக் கும் தெரியும். ஆனால் ஹர்திக் பாண்ட்யா சிறப்பு திறன் படைத்த வீரர் ஆவார்.

ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் மகிழ்ச்சியாக ஆடினோம். அதேநேரத்தில் இது பவுலர்களுக்கு கொடூரமான நாள். தொடர்ந்து பந்து வீச்சு மற்றும் பேட்டிங் வரிசையில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம். வீரர்களும் இந்த முயற்சியை வாய்ப்பாகவே கருதுகிறார்கள். தொடரை வென்று தொடக்கம் கண்டு இருப்பது சிறப்பானதாகும். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். 225 அல்லது 235 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தால், இந்த ஆட்டத்தில் இந்திய அணி எங்களிடம் இருந்து தப்பி இருக்க முடியாது. நாங்கள் விக்கெட்டை வீழ்த்த போராடினோம். ஜாசன் ராய், ஜோஸ்பட்லர் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் கண்ட சொதப்பல் எங்களுக்கு பாதகமானது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுள்ளோம். வரும் ஆட்டங்களில் இன்னும் முன்னேற்றம் காண்போம்’ என்றார்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், ‘ரோகித் சர்மாவின் ஆட்டம் அருமையாக இருந்தது. அவர் தனி ஒருவராக நமக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். கடந்த 2 ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்படாத நிலையில் இருந்து மீண்டும் வந்து ரோகித் சர்மா பேட்டிங்கில் அசத்திய விதம் சிறப்புக்குரியதாகும். 20 ஓவர் போட்டி வேடிக்கையானது. இதில் சிறப்பாக பந்து வீச வேண்டியது அவசியமானதாகும். முதல் ஓவரில் நான் 22 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், பதற்றம் அடையாமல் கடைசி வரை பந்து வீசினேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் பாடம் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். அது எனது ஆட்டத்துக்கு உதவிகரமாக இருக்கிறது. போட்டியில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி எனது ஆட்ட பாணி இருக்கும். அணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். நான் என்ன ரன் எடுக்கிறேன் என்பது முக்கியம் அல்ல’ என்று தெரிவித்தார்.