இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 12 July 2018 11:30 PM GMT (Updated: 12 July 2018 10:52 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். ரோகித் சர்மா சதம் நொறுக்கினார்.

நாட்டிங்காம்,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுக வீராக இடம் பிடித்தார். இதனால் புவனேஷ்வர்குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் முதல் 10 ஓவர்களில் அவர்கள் பேட்டிங்கில் அசத்தினர். 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை பந்து வீச கேப்டன் கோலி அழைத்தார்.

அந்த ஓவரிலேயே அவர் இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை பிரித்தார். ஸ்கோர் 73 ரன்களாக உயர்ந்த போது, குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஜாசன் ராய் (38 ரன், 35 பந்து, 6 பவுண்டரி) ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார்.

மணிக்கட்டை அதிகமாக (ரிஸ்ட் ஸ்பின்னர்) பயன்படுத்தி சுழல்ஜாலம் காட்டுவதில் வல்லவரான குல்தீப் யாதவின் பந்து வீச்சை கண்டு இங்கிலாந்து வீரர்கள் மிரண்டனர். அடுத்து வந்த ஜோ ரூட் (3 ரன்) மற்றும் பேர்ஸ்டோ (38 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆக்கினார்.

அடுத்தடுத்து விக்கெட் வீழ்ச்சியால் இங்கிலாந்தின் ரன்வேகம் வெகுவாக குறைந்தது. கேப்டன் மோர்கனை (19 ரன்) இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து அணி 105 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (19.2 ஓவர்) பறிகொடுத்து பரிதவித்தது.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பட்லர் ஓரளவு வேகமாக ரன்களை திரட்டினாலும், தடுமாறிய ஸ்டோக்ஸ் மந்தமாகவே விளையாடினார்.

அணியின் ஸ்கோர் 198 ரன்களை எட்டிய போது, இந்த கூட்டணியையும் குல்தீப் யாதவ் உடைத்தார். அவரது பந்து வீச்சில் பட்லர் (53 ரன், 51 பந்து, 5 பவுண்டரி) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். அவரது மற்றொரு ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (50 ரன், 103 பந்து, 2 பவுண்டரி), டேவிட் வில்லி (1 ரன்) நடையை கட்டினர்.

இறுதி கட்டத்தில் மொயீன் அலியும் (24 ரன்), அடில் ரஷித்தும் (22 ரன்) அந்த அணி 250 ரன்களை கடக்க வழிவகுத்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

அடுத்து 269 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 40 ரன்களில் (27 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் இணைந்து வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்து பிறகு அதிரடியில் வெளுத்துகட்டிய ரோகித் சர்மா, பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி தனது பங்குக்கு 75 ரன்கள் (82 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.

முடிவில் இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களுடனும் (114 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 23 வயதான குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து பிரமிக்க வைத்தார். அவரது பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்கவில்லை. 38 பந்துகளில் ரன்னே (டாட்பால்) எடுக்கப்படவில்லை.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இடக்கை சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவாகி இருக்கிறது. இதே போல் இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் அற்புதமான பந்து வீச்சும் இது தான்.

இந்திய பவுலர்களில் ஒரு இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சு என்று எடுத்துக் கொண்டால் ஸ்டூவர்ட் பின்னி (4-6), கும்பிளே (12-6), நெஹரா (23-6) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் குல்தீப் யாதவின் பந்து வீச்சு அமைந்துள்ளது.

Next Story