டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தியது திண்டுக்கல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை அணியை வீழ்த்தியது திண்டுக்கல்
x
தினத்தந்தி 13 July 2018 5:43 PM GMT (Updated: 13 July 2018 5:43 PM GMT)

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றிபெற்றது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் நடந்த 2–வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சும், மதுரை பாந்தர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் டி.ரோகித்தும், விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கும் 5 ஓவர்களில் 50 ரன்களை திரட்டி நேர்த்தியான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ரோகித் 24 ரன்களில் (2 சிக்சர், 2 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தலைவன் சற்குணம் (26 ரன், 26 பந்து) பெரிய அளவில் அதிரடி காட்டாவிட்டாலும் இரண்டு மெகா சிக்சர் அடித்த திருப்தியுடன் வெளியேறினார். அடுத்து வந்த சந்திரன் தனது பங்குக்கு 35 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே, அரைசதத்தை கடந்த அருண் கார்த்திக் 61 ரன்களில் (44 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வினின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

திண்டுல்கர் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மிடில் ஓவர்களில் மதுரை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 190 ரன்களை தாண்டுவது போல் சென்ற மதுரையின் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை சுவைத்தது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 68 ரன்களும் (42 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்), விவேக் 70 ரன்களும் (33 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி களத்தில் நின்றனர். தொடக்க ஆட்டத்தில் திருச்சியுடன் தோற்றிருந்த திண்டுக்கல் அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

Next Story