கிரிக்கெட்

‘மனதும், உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிரடி வெளிப்படும்’ -கே.எல்.ராகுல் + "||" + The action is exposed only if the mind and body combine - KL. Rahul

‘மனதும், உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிரடி வெளிப்படும்’ -கே.எல்.ராகுல்

‘மனதும், உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிரடி வெளிப்படும்’  -கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக அதிரடி காட்டுபவர், கே.எல்.ராகுல். ஐ.பி.எல். போட்டிகளில் ஆரம்பித்த இவரது அதிரடி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் தொடர்கிறது.
இந்திய மண்ணில் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசியவர் கே.எல்.ராகுல், அதே பாணியில் வெளிநாட்டு மண்ணிலும் அதிரடியாக அசத்துகிறார். எல்லா விதமான போட்டிகளிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் ராகுல் அதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறார். கேளுங்கள்...!

* கடந்த சில மாதங்களாகவே அதிரடியாக விளையாடுகிறீர்கள். அது எப்படி சாத்தியமாகிறது?

மகிழ்ச்சியான தருணங்கள் அது. கிரிக்கெட் விளையாட்டை பொருத்தமட்டில் ‘தனி ஒருவன்’ மட்டுமே ஒரு ஆட்டத்தின் வெற்றியையும், தோல்வியையும் தீர்மானித்துவிட முடியாது. குழு பங்களிப்பு என்பது அவசியமானது. ஆனால் இந்த கருத்தை உடைத்தெறியும் பட்சத்தில்தான் நாம் கதாநாயகர்களாக மாறுகிறோம். ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக நான் விளையாடிய விதம் என்னை பூரிப்படைய செய்தது. ஏனெனில் அணியின் ஒட்டுமொத்த விக்கெட்டுகளும் மளமளவென சரிந்தாலும், நான் மட்டும் தனி ஒருவனாக போராடினேன். இந்த போராட்டத்திற்கு ஒருசில வெற்றிகளும் பரிசாக கிடைத்தன. இந்த உற்சாகம்தான் என்னை அதிரடியாக விளையாட செய்கிறது. மேலும் மனதும், உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிரடி வெளிப்படும்.

* ஒரு வீரர் நல்ல ‘பார்மில்’ இருப்பது பற்றியும் ‘பார்ம் அவுட்’ ஆகி தடுமாறுவது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

‘பார்ம், பார்ம் அவுட்’ இவை இரண்டுமே வெறும் வார்த்தைகள்தான். ஒரு வீரர் சிறப்பாக விளையாடும்போது அவரை நல்ல பார்மில் உள்ள வீரர் என புகழ்கிறார்கள். அவரே ஆட்டத்தில் சொதப்புகையில் பார்ம் அவுட் வீரராக மாறிவிடுகிறார். ஒரு வீரர் களத்தில் நின்று 20 பந்துகளை எதிர்கொண்டாலே போதும். அவர் நல்ல பார்மிற்கு வந்துவிடுவார். அது நடக்காத பட்சத்தில்தான் விரைவில் அவுட்டாகி, பார்ம் அவுட் வீரராக பெயர் பெறுகிறார். விளையாட்டிற்கும், பார்ம்-பார்ம் அவுட் வார்த்தைக்கும் சம்பந்தமில்லை. ஆட்டத்திறனும், அதிர்ஷ்டமுமே அதை தீர்மானிக்கின்றன.

* இங்கிலாந்து தொடருக்காக சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?

‘இங்கிலாந்து’ என்றாலே பவுன்சர் பந்துகள் நிறைந்த விளையாட்டு என்றாகிவிட்டது. ஏனெனில் இங்கிலாந்து மக்களும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் பவுன்சர் வகை பந்துகளை விரும்புகிறார்கள். அதற்காகவே இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகமும் பவுன்சர் பந்துகளை வீசுவதற்கு ஏதுவாக புற்கள் நிறைந்த விக்கெட்டை தயார் செய்து கொடுக்கிறது. அதனால் நானும் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டேன். 20 நாட்களுக்கு மேலாக பவுன்சர் ரக பந்துகளையே எதிர்கொண்டு பயிற்சி எடுத்தேன். அதேசமயம் இங்கிலாந்து பவுலர்கள் வீசும் ‘ஸ்விங்’ வகை பந்துகளுக்கும் பயிற்சி எடுத்திருக்கிறேன். புது பந்துகளில் ‘ஸ்விங்’ செய்வது சாதாரண ஒன்று. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் 15 ஓவர்களுக்கு பிறகும் ‘ஸ்விங்’ செய்யக்கூடியவர்கள். அதனால் அவர்களது ‘ஸ்விங்’ பந்துகளை கவனமாக எதிர்கொள்ள சிறப்பாக தயாராகி இருக்கிறேன்.

* இதற்கு முன்பாக இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்திருந்தது. அத்தகைய வலுவான நிலையில் இருக்கும் அணியுடன் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தீர்களா?

இங்கிலாந்து அணியின் கடந்த சில வருட கதையை புரட்டி பார்த்தால், அதில் தோல்விகளே நிறைந்திருக்கும். ஏனெனில் இங்கிலாந்து அணியை இளம் வீரர்களை கொண்டு கட்டமைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர சில காலம் தேவைப்பட்டது. இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் இலங்கை, வங்காளதேசம் போன்ற அணிகளும் இங்கிலாந்தை வஞ்சம் தீர்த்தன. ஆனால் இன்று இங்கிலாந்து அணி, ஒரு வெற்றிக் கூட்டணியாக மாறிவிட்டது. இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்களாக மாறிவிட்டனர். அதனால்தான் ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்ய முடிந்தது.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவ வீரர்களும் உண்டு. புதுமுக வீரர்களும் உண்டு. எப்போதும் அணியை ஒரு கலவையாகவே வைத்திருப்பார்கள். அதுவே இந்திய அணியின் வெற்றி ரகசியமும்கூட. இதை உணர்ந்திருந்ததால் இங்கிலாந்தின் அச்சுறுத்தலை எளிதாக எதிர்கொண்டோம். வெற்றியும் கனிந்தது.

* கிரிக்கெட் விளையாட்டில் சம்பாதித்தது அதிகமா? இல்லை செலவழித்தது அதிகமா?

கிரிக்கெட் வீரர்கள் என்றவுடன் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள். நிறைய பணம் சேர்த்திருப்பார்கள் என்று தவறாக நினைக்காதீர்கள். கிரிக்கெட் விளையாட்டிற்கு செலவழிப்பது என்பது வாரா கடன்போன்றது. தண்ணீரில் எழுதும் கணக்கை போன்றது. அதிர்ஷ்டம் அடித்தால் லாபம். இல்லையேல் நஷ்டமே மிஞ்சும்.

ஆடம்பரமில்லாத கிரிக்கெட் கிட் ஒன்று வாங்கவே 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். அதற்குமேல் பயிற்சிக்கான கட்டணம், பயிற்சியில் அடிப்பட்டால் அதற்கான மருத்துவ செலவு, பிரத்யேக ஷூ, உடை என பணம் செலவாகிக்கொண்டே இருக்கும். தற்போது கிரிக்கெட் பயிற்சிகள் 6 வயதிலேயே ஆரம்பமாகிவிடுவதால், ஒரு கிரிக்கெட் வீரர் எவ்வளவு செலவழித்திருக்கிறார் என்று யோசித்து பாருங்கள். 6 வயதில் இருந்து 20 வயது வரை ஒரு கிரிக்கெட் வீரர் செய்யும் செலவையும், அவர் சம்பாதிக்கும் பணத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் நஷ்டமே மிஞ்சும். அதுவே இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்காவிட்டால், அவரது முயற்சிகளுடன், பெற்றோரின் முதலீடும் வீணாகிவிடும்.

* உங்களுடைய கிரிக்கெட் செலவை கணக்கு வைத்திருக்கிறீர்களா?

(சிரித்தபடியே) கணக்கு வைத்திருக்கிறேன். என்னுடைய அப்பா ஆசையாக வாங்கிக்கொடுத்த கிரிக்கெட் கிட் முதல் கடும் கோபத்தோடு பக்கத்து வீட்டுக்காரரின் ஜன்னல் கண்ணாடிகளை சரி செய்து கொடுத்தது வரை அனைத்தையும் மனக்கணக்காக வைத்திருக்கிறேன். இதில் என்ன கொடுமை தெரியுமா...? என்னுடைய பெற்றோர் கிரிக்கெட் சம்பந்தமான பொருட்களை வாங்கி கொடுத்ததை விட, நான் உடைத்த கண்ணாடி ஜன்னல்களுக்கு கொடுத்த பணமே அதிகம். நண்பர்களோடு தெருவில் கிரிக்கெட் விளையாடுவதாக கூறி.... அக்கம் பக்கத்தில் இருக்கும் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதே என்னுடைய வாடிக்கையாகிவிட்டது. கடந்த வருடம் கூட நான்கு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தேன்.

* பாலிவுட் நடிகையுடன் அடிக்கடி ஊர் சுற்றுவதாக கிசுகிசுக்கள் வருகிறதே. அதுபற்றி?

என்னுடைய வெற்றி-தோல்விகளை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வதை போன்றே, என்னுடைய திருமண வாழ்க்கையையும் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன். அதற்கான காலம் வெகுவிரைவிலேயே கனியும்.

* டி-20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் ஆட்டம் இவை மூன்றில் உங்களுக்கு பிடித்தது எது?

டி-20 போட்டிகளில் அதிரடியாக விளையாடினாலும் எனக்கு பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளே. அதில்தான் விளையாட்டை முழுவதுமாக அனுபவிக்க முடியும். அவசரமில்லாமல், கிரிக்கெட் விளையாட்டின் சந்தோஷத்தை அணுஅணுவாக ரசிக்கமுடியும்.