முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 73 ரன்னில் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி


முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை 73 ரன்னில் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 14 July 2018 10:15 PM GMT (Updated: 14 July 2018 8:08 PM GMT)

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 73 ரன்னில் சுருட்டி இலங்கை அணி அபார வெற்றிபெற்றது.

காலே,

இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 287 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 126 ரன்களும் எடுத்தன. அடுத்து 161 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 57.4 ஓவர்களில் 190 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கருணாரத்னே 60 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 352 ரன்கள் இலக்கை நோக்கி 3-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 28.5 ஓவர்களில் வெறும் 73 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இனவெறி சர்ச்சை தடை காலம் முடிந்து 1992-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய பிறகு தென்ஆப்பிரிக்க அணி எடுத்த மோசமான ஸ்கோர் இதுவாகும். அத்துடன் இலங்கைக்கு எதிராக அந்த அணியின் குறைந்த ஸ்கோராகவும் இது பதிவானது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 6 விக்கெட்டுகளும், ஹெராத் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.


Next Story