கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து + "||" + england won by 8 wickets

கடைசி ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து

கடைசி ஒரு நாள் போட்டி: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. #IndVsEng
லீட்ஸ்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 18 பந்துகளை எதிர்க்கொண்டு 2 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷிகர் தவானும், விராட் கோலியும் இந்திய அணிக்கு ரன் சேர்க்கும் பணியை தொடங்கினார்கள். 17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார். 

இங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷித் இந்தியாவின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, கட்டுக்குள் வைத்தார். விராட் கோலி அவுட் ஆன பின்னர் களமிறங்கிய வீரர்களும் அவர்களுடைய பங்கிற்கு இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 4.4-வது ஓவரில் பிரிந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களில் ஹர்திக் பாண்டியாவால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஜோய் ரூட் களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ ( 30 ரன்கள், 13 பந்துகள், 7 பவுண்டரிகள்) தாகூர் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், ஜோய் டூட்-உடன் கை கோர்த்தார். இந்தியாவின் பந்து வீச்சை சிறிதும் சிரமமின்றி எதிர்கொண்ட இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியினர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்காததால், 44.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோய் ரூட் சதம் அடித்து போட்டியை நிறைவு செய்தார். மோர்கன் 88 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியது.