கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல் + "||" + TNPL Cricket: Dindigul-Coimbatore teams Today clash

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்–கோவை அணிகள் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்–கோவை அணிகள் சந்திக்கின்றன.

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல்–கோவை அணிகள் சந்திக்கின்றன.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னை, நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 7–வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி பேட்டிங்கில் வலுவாக காணப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சுடன் கடைசி ஓவரில் தோல்வியை தழுவிய திண்டுக்கல் அணி அடுத்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. ஹரி நிஷாந்த், விக்கெட் கீப்பர் ஜெகதீசன், விவேக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

அஸ்வின் பேட்டி

திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதல் இரு ஆட்டங்களில் நெல்லையில் விளையாடி விட்டு நத்தத்திற்கு வந்துள்ளோம். இது வேறு மைதானமாக இருந்தாலும் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. நாங்கள் எல்லோரும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப எங்களை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது தெரியும். எது எப்படியோ சூழலுக்கு தகுந்தபடி எந்த அணி தங்களை சிறப்பாக மாற்றிக்கொள்கிறதோ அந்த அணியின் கையே ஓங்கும்’ என்றார்.

கோவை கிங்ஸ் அணி, காரைக்குடி காளைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ‘டை’ கண்டு பிறகு சூப்பர் ஓவரில் வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் அபினவ் முகுந்த், ஆல்–ரவுண்டர் அந்தோணி தாஸ், வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக விளங்குகிறார்கள்.

அபினவ் முகுந்த் கூறுகையில், ‘புதிய சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதும் முக்கியமானது. சூப்பர் ஓவரில் முடிவு கிடைத்த கடந்த ஆட்டத்தில் நன்றாகவே ஆடினோம். ஆனாலும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதை செய்வோம்’ என்றார்.

இவ்விரு அணிகளும் இதுவரை இரண்டு முறை சந்தித்து இருக்கிறது. ஒரு ஆட்டத்தில் கோவை வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஹரி நிஷாந்த், ஜெகதீசன், விவேக், சதுர்வேத், அஸ்வின் (கேப்டன்), அனிருத், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், திரிலோக் நாக்.

கோவை கிங்ஸ்: அபினவ் முகுந்த் (கேப்டன்), ஷாருக்கான், வெங்கட்ராமன், அந்தோணி தாஸ், அகில் ஸ்ரீநாத், ரோகித், ராஜேஷ், ரஞ்சன் பால், சுரேஷ் பாபு, விக்னேஷ், டி.நடராஜன்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


அதிகம் வாசிக்கப்பட்டவை