டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 8:46 PM GMT)

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நத்தம், 

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

7-வது லீக் ஆட்டம்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் சென்னை, நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

ஷாருக்கான் அபாரம்

‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாருக்கான், கேப்டன் அபினவ் முகுந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். அபினவ் முகுந்த் 4 ரன்னில் விக்கெட் கீப்பர் ஜெகதீசனால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். அடுத்து வந்த ரஞ்சன் பால் முதல் பந்திலேயே ‘ரன்-அவுட்’ ஆகி வெளியேறினார்.

தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்தாலும் ஷாருக்கான் அபாரமாக அடித்து ஆடினார். அவருடன் இணைந்த ரோகித் அதிரடியாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 67 ரன்னை எட்டிய போது ரோகித் (26 ரன்கள், 16 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து ஷாருக்கானுடன் இணைந்த அகில் ஸ்ரீநாத்தும் அதிரடி காட்டினார். இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாருக்கான் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் முகமது பந்து வீச்சில் ஹரி நிஷாந்திடம் கேட்ச் கொடுத்து ‘அவுட்’ ஆனார். அடுத்து களம் கண்ட அந்தோணி தாஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அகில் ஸ்ரீநாத் 54 ரன்னுடனும் (40 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்), வெங்கடராமன் 6 ரன்னுடனும் (2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் ஆர்.அஸ்வின், முகமது, ஜெ.கவுசிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

திண்டுக்கல் அணி அபார வெற்றி

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. 17.4 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 19 ரன்னிலும் (9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), சதுர்வேத் 72 ரன்னிலும் (36 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன்) ஆட்டம் இழந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 66 ரன்னுடனும் (50 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்), அனிருத் 25 ரன்னுடனும் (11 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கோவை கிங்ஸ் அணி தரப்பில் விக்னேஷ், ராஜேஷ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

Next Story