இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’


இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் ‘டக்–அவுட்’
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 8:08 PM GMT)

இந்தியா – இலங்கை இளையோர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொழும்பில் நடந்து வருகிறது.

கொழும்பு, 

இந்தியா – இலங்கை இளையோர் அணிகள் (19 வயதுக்குட்பட்டோர்) இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 244 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 589 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அதர்வா டெய்ட் (113 ரன்), அயுஷ் படோனி (185 ரன்) சதம் விளாசினர். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜூனும் இந்த போட்டியில் முதல்முறையாக பங்கேற்றுள்ளார். ஆல்–ரவுண்டரான அவர் இடக்கை பேட்ஸ்மேன் ஆவார். நேற்று பேட்டிங்கில் களம் இறங்கிய அவர் 11 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி சுழற்பந்து வீச்சாளர் துல்‌ஷனின் பந்து வீச்சில் அருகில் நின்ற சூர்யபன்டாராவிடம் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார். சச்சின் தெண்டுல்கரும் தனது அறிமுக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ‘டக்–அவுட்’ ஆனது நினைவு கூரத்தக்கது.

அடுத்து 345 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story