கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை + "||" + One Day Against Zimbabwe: Pakistani player Pahar Jaman 210 runs consecutive

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை பட

புலவாயோ, 

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜிம்பாப்வே அணியில் முன்னணி வீரர்கள் ஊதிய பிரச்சினை காரணமாக விலகி விட்டதால் 2–ம் தர அணியே இந்த தொடரில் விளையாடுகிறது.

அனுபவம் இல்லாத ஜிம்பாப்வே அணியை நையபுடைத்து வரும் பாகிஸ்தான் வீரர்கள் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் மெகா வெற்றியை ருசித்தனர். குறிப்பாக 3–வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வெறும் 67 ரன்களில் சுருட்டி அந்த இலக்கை 9.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தனர்.

பஹார் ஜமான் இரட்டை செஞ்சுரி

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி புலவாயோ நகரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தையும் பாகிஸ்தான் வீரர்கள் சாதனை களமாக மாற்றி விட்டார்கள். இதில் டாஸ் ‘ஜெயித்து’ முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பஹார் ஜமானும், இமாம் உல்–ஹக்கும் நிலைத்து நின்று விளையாடி துரிதமாக ரன்களை சேகரித்தனர். இந்த கூட்டணியை உடைக்க ஜிம்பாப்வே எடுத்த முயற்சிக்கு 42–வது ஓவரில் தான் பலன் கிடைத்தது. அணியின் ஸ்கோர் 304 ரன்களாக உயர்ந்த போது இமாம் உல்–ஹக் 113 ரன்களில் (122 பந்து, 8 பவுண்டரி) கேட்ச் ஆனார். எந்த ஒரு விக்கெட்டுக்கும் பாகிஸ்தான் ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் (304 ரன்) இதுதான்.

மறுமுனையில் 3–வது சதத்தை கடந்த பஹார் ஜமான், எதிரணியின் பந்து வீச்சை தொடர்ந்து நொறுக்கித் தள்ளினார். அவருடன் 2–வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆசிப் அலி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அபாரமாக ஆடிய பஹார் ஜமான் 47–வது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு விரட்டி இரட்டை சதத்தை எட்டினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மொத்தத்தில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 6–வது வீரராக இணைந்தார். அதே சமயம் குறைந்த இன்னிங்சில் (17 ஆட்டம்) இரட்டை சதத்தை அடைந்த சாதனையாளராக விளங்குகிறார்.

பாகிஸ்தான் 399 ரன்

400 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான் அணியால் துரதிர்ஷ்டவசமாக அதை எட்ட முடியாமல் போய் விட்டது. கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் இந்த மைல்கல்லை அடையலாம் என்ற நிலையில், பஹார் ஜமான் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்து அசத்தியது. ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2010–ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக 385 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அத்துடன் ஜிம்பாப்வே மண்ணில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.

பஹார் ஜமான் 210 ரன்களுடனும் (156 பந்து, 24 பவுண்டரி, 5 சிக்சர்), ஆசிப் அலி 50 ரன்களுடனும் (22 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்து சாதனை

இந்த ஆட்டத்தில் பஹார் ஜமானும், இமாம் உல்–ஹக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடக்க விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இலங்கையின் தரங்கா–ஜெயசூர்யா கூட்டணி 2006–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த 12 ஆண்டு கால சாதனையை பஹார் ஜமான்–இமாம் உல்–ஹக் ஜோடி முறியடித்துள்ளது.

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 4–வது அதிகபட்சமாகும். முதல் 3 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்–சாமுவேல்ஸ் (ஜிம்பாப்வேக்கு எதிராக 2–வது விக்கெட்டுக்கு 372 ரன்), இந்தியாவின் தெண்டுல்கர்–டிராவிட் (நியூசிலாந்துக்கு எதிராக 2–வது விக்கெட்டுக்கு 331 ரன்), கங்குலி–டிராவிட் (இலங்கைக்கு எதிராக 2–வது விக்கெட்டுக்கு 318 ரன்) ஆகிய ஜோடிகளின் சாதனைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

அன்வரின் சாதனை தகர்ப்பு

சயீத் அன்வர், 1997–ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தான் வீரரின் தனிநபர் அதிகபட்சமாக இருந்தது. அந்த 21 ஆண்டு கால சாதனையை 28 வயதான இடக்கை ஆட்டக்காரர் பஹார் ஜமான் தகர்த்துள்ளார். இரட்டை செஞ்சுரி விளாசிய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் பஹார் ஜமானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2017–ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பஹார் ஜமான் சதம் அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டது நினைவு கூரத்தக்கது.