தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: கே‌ஷவ் மகராஜ் மாயாஜால சுழலில் இலங்கை அணி திணறல்
x
தினத்தந்தி 20 July 2018 9:45 PM GMT (Updated: 20 July 2018 8:58 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே‌ஷவ் மகராஜின் அபார சுழற்பந்து வீச்சில் இலங்கை அணி திணறியது.

கொழும்பு, 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே‌ஷவ் மகராஜின் அபார சுழற்பந்து வீச்சில் இலங்கை அணி திணறியது. அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி டெஸ்ட்

இலங்கை–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். கே‌ஷவ் மகராஜ் தனது அபாரமான சுழற்பந்து வீச்சு மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி அளித்தார். அதனை சமாளித்து நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதத்தை கடந்தனர்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. கருணாரத்னே 110 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் கே‌ஷவ் மகராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குணதிலகா–கருணாரத்னே இணை தொடக்க விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்ந்தது. 2010–ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணியின் தொடக்க ஜோடி சொந்த மண்ணில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுவே முதல்முறையாகும்.

8 விக்கெட்டுகள் வீழ்த்திய கே‌ஷவ் மகராஜ்

அடுத்த 2 ஓவர்களில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா (57 ரன்கள், 107 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) கே‌ஷவ் மகராஜ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கே‌ஷவ் மகராஜின் மாயாஜால சுழற்பந்து வீச்சில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. நிலைத்து நின்று ஆடிய தனஞ்ஜெயா டிசில்வா 60 ரன்கள் (109 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) எடுத்த நிலையில் கே‌ஷவ் மகராஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ரங்கனா ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் நின்றனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான கே‌ஷவ் மகராஜ் 32 ஓவர்கள் பந்து வீசி 116 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை மண்ணில் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். அத்துடன் அவரது தனிப்பட்ட சிறந்த பந்து வீச்சும் இது தான்.


Next Story