வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை


வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை
x
தினத்தந்தி 21 July 2018 9:15 PM GMT (Updated: 21 July 2018 8:29 PM GMT)

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் காயம் அடைந்தார்.

டாக்கா, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் காயம் அடைந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான வங்காளதேச அணியில் இடம் பெறவில்லை. அந்த தொடரை வங்காளதேச அணி 0–2 என்ற கணக்கில் இழந்தது. இந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு தடை விதிக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹஸ்சன் அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தவிர மற்ற நாடுகள் டெஸ்ட் போட்டியில் விளையாட அதிக ஆர்வம் காட்டுவதாக எனக்கு தெரியவில்லை. டெஸ்ட் போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் வராததால் டெஸ்ட் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியங்களும், ஒளிபரப்பாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எங்கள் நாட்டை சேர்ந்த சீனியர் வீரர்கள் சிலரும் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்பவில்லை. ‌ஷகிப் அல்–ஹசன், முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் விளையாட தயக்கம் காட்டுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் ஆடினால் காயம் அடையக்கூடும் என்று வீரர்கள் நினைக்கிறார்கள். எனவே டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்களை தான் களம் இறக்க வேண்டியது உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகையில் காயம் அடைந்ததால் முஸ்தாபிஜூர் ரகுமான் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இதனால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு தடையில்லா சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது. 20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்ததால் நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்த 2 ஆண்டுகள் வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டியில் விளையாடக்கூடாது என்று ஏற்கனவே நான் அவரிடம் தெரிவித்து உள்ளேன்’ என்று கூறினார்.


Next Story