கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அபார வெற்றி + "||" + Last Test against South Africa: Sri Lankan team win

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அபார வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை அணி அபார வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
கொழும்பு,

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை அணி 338 ரன்களும், தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்களும் எடுத்தன. தென்ஆப்பிரிக்காவுக்கு ‘பாலோ- ஆன்’ வழங்காமல் 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.


பின்னர் 490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுடன் தடுமாறிக் கொண்டு இருந்தது. டி புருன் 45 ரன்னுடனும், பவுமா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. டி புருன், பவுமா ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இலங்கை அணியினர் தங்களது சுழற்பந்து வீச்சு தாக்குதலை தொடர்ந்தனர். அதனை இருவரும் தாக்குப்பிடித்து நிதானமாக விளையாடினார்கள். டி புருனை தொடர்ந்து பவுமாவும் அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 236 ரன்னாக உயர்ந்த போது பவுமா (63 ரன்கள், 98 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ஹெராத் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு டி புருன்-பவுமா ஜோடி 123 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த குயின்டான் டி காக் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன் எடுத்த நிலையில் ஹெராத் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து ரபடா களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய டி புருன் சதம் அடித்தார். 6-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டி புருன் அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் டி புருன் (101 ரன்கள், 232 பந்துகளில் 12 பவுண்டரியுடன்) ஹெராத் பந்து வீச்சில் போல்டு ஆனார். டி புருன் சதம் அணிக்கு பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து ரபடா 18 ரன்னிலும், ஸ்டெயின் 6 ரன்னிலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 86.5 ஓவர்களில் 290 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத் 6 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனை அடுத்து இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு இலங்கை அணியின் பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் அளித்த பேட்டியில், ‘மிகவும் கடினமாக உழைத்ததற்கு இந்த பலன் கிடைத்து இருக்கிறது. இலங்கை அணியில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. கேப்டன் பதவி குறித்து நான் அதிகம் சிந்திக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிஸ்சிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘கடைசி இன்னிங்சில் எங்கள் வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். இந்த ஆடுகளங்களில் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியும் என்பதை டி புருன் செய்து காட்டினார். கேஷவ் மகராஜ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நாங்கள் போதிய ரன்கள் எடுக்கவில்லை. எங்களுக்கு இந்த தொடரில் நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமையவில்லை. இலங்கை அணிக்கே எல்லா பாராட்டுகளும் சாரும். அவர்கள் எங்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். இந்திய துணை கண்டத்தில் விளையாடுகையில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.