இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை


இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை
x
தினத்தந்தி 24 July 2018 9:04 AM GMT (Updated: 24 July 2018 9:04 AM GMT)

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். #SanjayManjrekar

மும்பை

இந்திய அணியில் 4ம் வரிசையில் எந்த வீரரை களமிறக்குவது என்ற பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் எதிரொலித்தது. ராகுலை 4ம் வரிசையில் களமிறக்க வேண்டும் என்பதே கங்குலி, லட்சுமண் போன்ற முன்னாள் ஜாம்பவான்களின் கருத்தாக உள்ளது.

இந்திய அணியின் 4ம் வரிசை வீரர் பிரச்சனைக்கு ராகுல் நிரந்தர தீர்வாக இருப்பார். ராகுலை நிரந்தரமாக நான்காம் வரிசையில் ஆடவிட்டு, அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்தால்தான், அவரால் ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆடமுடியும் என கங்குலி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 4ம் வரிசை பிரச்சினைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் மூன்று ஆலோசனைகளை தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்றாமிடத்தில் களமிறங்கும் கேப்டன் கோலி, அந்த இடத்தை ராகுலுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு கோலி நான்காம் வரிசையில் களமிறங்கலாம்.

நடுவரிசை வீரர்கள், ஒன்று மட்டும் இரண்டு ரன்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் நடுவரிசையில் ஆடுவதற்கு ஷ்ரேயாஸ் ஐயர் சரியான தேர்வாக இருப்பார். எனவே அவரை 4ம் வரிசையில் களமிறக்கலாம்.

ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் 4ம் வரிசையில் இறங்கி ஆடியுள்ளார். அந்த இடத்தில் இறங்கி நன்றாக ஆடியும் உள்ளார்.

எனவே ரோஹித்தை 4ம் வரிசையில் இறக்கிவிட்டு ராகுலை தவானுடன் ஓபனிங் செய்யவிடலாம். இந்த மூன்று ஆலோசனைகளையும் சஞ்சய் மஞ்சரேக்கர் வழங்கியுள்ளார்.

Next Story