கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறோம் - இந்திய வீரர் புஜாரா + "||" + We're greatly prepared for the England Test series - Indian boss Pujara

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறோம் - இந்திய வீரர் புஜாரா

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக தயாராகி இருக்கிறோம் - இந்திய வீரர் புஜாரா
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறோம் என்று இந்திய வீரர் புஜாரா கூறியுள்ளார்.
பர்மிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எப்போதும் அங்குள்ள (இங்கிலாந்து) சூழலில் நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும். இங்கிலாந்தில் பேட் செய்வது எளிதான விஷயம் அல்ல. ஏனெனில் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், இதே போல் வேகப்பந்து வீச்சையும் சமாளித்தாக வேண்டும். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு (1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வி) பிறகு நிறைய வெளிநாட்டு தொடர்களில் விளையாடி இருக்கிறோம். அந்த அனுபவம் நிச்சயம் தற்போதைய இங்கிலாந்து பயணத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல், இந்தியாவிலும் சில வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இது போன்ற சூழலில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இந்த முறை முன்பை விட சிறப்பாக தயாராகி இருக்கிறோம்.

இந்த தொடருக்காக பேட்டிங் தொழில்நுட்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்திருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். அது பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. ஆனால் கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன். இங்குள்ள சூழலில் மனஉறுதியும், பொறுமையும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆடுகளத்தில் பந்து நன்கு நகரும் போது, அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். அதை சமாளித்து நிலைத்து நின்று விட்டால், அதன் பிறகு இயல்பான ஷாட்டுகளை அடிக்க முடியும்.

இங்கிலாந்து சவாலான அணி என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். ஒன்றிரண்டு பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டும் வியூகங்களை வகுப்பது சரியாக இருக்காது. யார் வேண்டுமென்றாலும் அபாயகரமான பந்து வீச்சாளராக உருவாக முடியும். ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் சாமர்த்தியமாக பந்து வீசக்கூடியவர்கள் என்பதை அறிவோம்.

அதே நேரத்தில் மற்ற பவுலர்களை எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும். அதே போல் தான் நமது பந்துவீச்சு குழுவும் எதிரணியின் எல்லா பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் யுக்திகளை வைத்திருக்க வேண்டும். எங்களுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் சில பேட்ஸ்மேன்கள் நிறைய சாதித்து இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த திட்டங்கள் தீட்டுவோம். இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘2012-ம் ஆண்டு இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை நாங்கள் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினோம். எனது வாழ்க்கையில் விளையாடிய மிகச்சிறந்த டெஸ்ட் தொடர்களில் அதுவும் ஒன்று. ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்தியாவுக்கு செல்லும் போதெல்லாம், அங்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தான் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும், நீங்கள் திறமையை நிரூபித்து காட்ட விரும்பினால், அங்கு சாதித்து காட்டுங்கள் என்று ஒவ்வொருவரும் சொல்வார்கள். இந்த வகையில் உண்மையிலேயே அது பெருமைக்குரிய ஒரு தொடராக அமைந்தது’ என்றார். அந்த தொடரில் ஆண்டர்சன் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

ஆண்டர்சன் மேலும் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக நான் உடற்பயிற்சி மற்றும் பந்து வீச்சு பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்போது புத்துணர்ச்சியுடன் சாதிக்க ஆர்வமாக உள்ளேன். சீனியர் வீரர்கள் என்ற வகையில் எனக்கும், ஸ்டூவர்ட் பிராட்டுக்கும் களத்தில் அசத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது’ என்றார்.