காஞ்சிவீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: மதுரை பாந்தர்ஸ் அணி அசத்தல் வெற்றி


காஞ்சிவீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: மதுரை பாந்தர்ஸ் அணி அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 25 July 2018 11:00 PM GMT (Updated: 25 July 2018 7:17 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி அசத்தல் வெற்றியை பெற்றது.

நத்தம்,

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), சென்னை, நெல்லை ஆகிய 3 ஊர்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 15–வது ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் மதுரை பாந்தர்ஸ், வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி கேப்டன் அபராஜித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவர் 2–வது பந்திலேயே தொடக்க வீரர் அருண்கார்த்திக் 4 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ரோகித்துடன், தலைவன் சற்குணம் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். இதனால் மதுரை அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் சேர்த்தது. இரண்டு முறை (12 ரன், 45 ரன்) கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய தலைவன் சற்குணம் சிக்சர் விளாசி அரைசதத்தை கடந்தார்.

இதற்கிடையே கேப்டன் ரோகித் 32 ரன்களிலும் (30 பந்துகளில் 4 பவுண்டரி), அடுத்து வந்த சுஜித்சந்திரன் 5 ரன்னிலும் (8 பந்துகளில் 1 பவுண்டரி) வெளியேற, சிறிது நேரத்தில் தலைவன் சற்குணம் 62 ரன்களில் (40 பந்துகளில் 1பவுண்டரி, 7சிக்சர் ) கேட்ச் ஆனார். இதனால் மதுரை அணியின் ரன்வேகம் குறைந்தது.

பின்னர் வந்த கவுசிக் 27 ரன்களும் (20 பந்துகளில் 3 பவுண்டரி), கார்த்திகேயன் 6 ரன்களும், நிலேஷ் சுப்ரமணியன் 2 ரன்களும், கிரன் 1 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். தன்வர் 22 ரன்களும் (10பந்துகளில் 3சிக்சர்), வருண் சக்ரவர்த்தி 1 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ரன்கள் 168 இலக்கை நோக்கி காஞ்சி வீரன்ஸ் அணி விளையாடியது. தொடக்க வீரர்களான சுப்பிரமணி சிவா 8 ரன்களும் ( 6 பந்துகளில் 1 சிக்சர்), விஷால்வைத்யா 31 ரன்களும் (34 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் கேப்டன் அபராஜித் 29 ரன்களிலும் (27 பந்துகளில் 2 சிக்சர்), ரோகின்ஸ் 7 ரன்களிலும் (5 பந்துகளில் 1 சிக்சர்) வெளியேற 15.3 ஓவர்களில் காஞ்சி வீரன்ஸ் அணி 100 ரன்களை கடந்தது.

இதற்கிடையே மோகித் 34 ரன்களில் (27 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க காஞ்சி அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அந்த அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மதுரையின் தன்வர் வீசினார். அந்த ஓவரில் ஷாம் (6 ரன்கள்) விக்கெட்டை இழந்ததோடு 17 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் காஞ்சி வீரன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சஞ்சய் 34 ரன்களுடனும் (18 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்) லிங்கேஷ் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் 3–வது அசத்தல் வெற்றியை பெற்றது.


Next Story