கிரிக்கெட்

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு குல்தீப் யாதவ் தயார்’ - தெண்டுல்கர் + "||" + Kuldeep Yadav ready for Test cricket '- Tendulkar

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு குல்தீப் யாதவ் தயார்’ - தெண்டுல்கர்

‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு குல்தீப் யாதவ் தயார்’ - தெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் சுழல் தாக்குதல் தொடுக்க குல்தீப் யாதவ் தயாராக இருப்பதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இது இங்கிலாந்தின் ஆயிரமாவது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பு அம்சமாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி என்ற பெருமையை பெற இங்கிலாந்து அணி காத்திருக்கிறது.


குறுகிய வடிவிலான போட்டிகளில் கலக்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், டெஸ்ட் போட்டியிலும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. அவரைத்தான் பிரதான அஸ்திரமாக பயன்படுத்த இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். இது அவருக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். அவர் பந்து வீசும் விதமும், அவரிடம் உள்ள திறமையும் அவர் டெஸ்ட் போட்டிக்கு தயார் என்பதையே காட்டுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த முறை இங்கிலாந்தில் வெயில் கொஞ்சம் அதிகமாக உள்ளது. இத்தகைய சூழல் நமது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்குமே என்றால், நிச்சயம் தொடரில் நமது கை ஓங்கும் அளவுக்கு இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகவும் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்திய அணியில் பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்களும், பவுலிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரால் பேட்டிங்கும் செய்ய முடியும். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நம்மிடம் உள்ளார். விக்கெட் கீப்பரின் பங்களிப்பு பேட்டிங்கில் முக்கியமானது. இதை வைத்து பார்க்கும் போது இந்திய அணி சரியான கலவையில் அமைந்திருப்பது போலவே தோன்றுகிறது.

காயமின்றி அனைத்து வீரர்களும் அணித்தேர்வுக்கு தயாராக இருப்பது எப்போதும் இனிமையான விஷயமாகும். அதே நேரத்தில் கிரிக்கெட்டில் காயத்தை தவிர்க்க முடியாது. அதுவும் விளையாட்டில் ஒரு பகுதி தான். வீரர்கள் காயத்தில் சிக்குவதும் நாம் சந்திக்கும் சவால்களில் ஒன்றாகும். அதற்காக நாம் ஜெயிக்க முடியாது என்பது அர்த்தம் அல்ல. அதையும் சமாளித்து சாதகமான முடிவுகளை கொண்டு வர முடியும்.

உதாரணமாக நாங்கள் டொரோண்டோவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்பிளே ஆகிய முன்னணி பவுலர்கள் இல்லை. ஆனாலும் நாங்கள் பாகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றோம். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து அணி 97 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தாலும் கூட இந்திய அணியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றால் இந்திய அணி 13 புள்ளிகளை இழந்து 112 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறும்.