பயிற்சி கிரிக்கெட்: கோலி உள்பட 4 இந்திய வீரர்கள் அரைசதம்


பயிற்சி கிரிக்கெட்: கோலி உள்பட 4 இந்திய வீரர்கள் அரைசதம்
x
தினத்தந்தி 25 July 2018 11:30 PM GMT (Updated: 25 July 2018 8:31 PM GMT)

பயிற்சி கிரிக்கெட்டில் கோலி உள்பட 4 இந்திய வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

செம்ஸ்போர்டு,

இந்தியா - எஸ்செக்ஸ் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கு அங்கீகாரம் கிடையாது என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி திணறியது. ஷிகர் தவான் (0), புஜாரா (1 ரன்), துணை கேப்டன் ரஹானே (17 ரன்) ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி நடையை கட்டினர்.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு முரளிவிஜயும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், அரைசதமும் கடந்தனர். விஜய் 53 ரன்களிலும் (113 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் கோலி 68 ரன்களிலும் (93 பந்து, 12 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர்.

இவர்களுக்கு பிறகு வந்த லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அரைசதத்தை எட்டினர். ராகுல் 58 ரன்களில் (92 பந்து, 12 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் (94 பந்து, 14 பவுண்டரி) ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடனும் (6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story