கிரிக்கெட்

சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்து கோவை கிங்ஸ் அணி 3-வது வெற்றி + "||" + Super Gillis against Coimbatore Kings team 3rd win

சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்து கோவை கிங்ஸ் அணி 3-வது வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்து கோவை கிங்ஸ் அணி 3-வது வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.
நெல்லை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நெல்லையில் நேற்றிரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, கோவை கிங்சுடன் மல்லுகட்டியது. ‘டாஸ்’ ஜெயித்த கோவை கேப்டன் அபினவ் முகுந்த் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி அபினவ் முகுந்தும், ஷாருக்கானும் கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர் சன்னிகுமார் சிங் வீசிய முதல் ஓவரில் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ஷாருக்கான் 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் பவுண்டரியும் விரட்டி மிரள வைத்தார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்ததும் கோவை அணியின் ரன்வேகம் சற்று குறைந்தது. இரண்டு முறை ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும் தப்பித்த இந்த ஜோடி ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தது.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் (11.1 ஓவர்) எடுத்த நிலையில், பிரிந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ்குமாரின் பந்து வீச்சில் அபினவ் முகுந்துக்கு (34 ரன், 35 பந்து, 4 பவுண்டரி) ஆப்-ஸ்டம்பு பறந்தது. அடுத்து வந்த வெங்கட்ராமன் 14 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஷாருக்கான் (59 ரன், 45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), அகில் ஸ்ரீநாத் (0), விக்கெட் கீப்பர் ரோகித் (1 ரன்) ஆகியோரும் சுழல் வலையில் சிக்கினர். 5 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் கோவை அணி நெருக்கடிக்குள்ளானது. அலெக்சாண்டர், அருண், எம்.அஸ்வின் உள்ளிட்டோர் சுழலில் கடும் குடைச்சல் கொடுத்தனர்.

ஆனாலும் இறுதி கட்டத்தில் அந்தோணிதாஸ் ஓரளவு அதிரடி காட்டியதால், அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது. அந்தோணி தாஸ் (28 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி பந்தில் கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. கில்லீஸ் வீரர்கள் எக்ஸ்டிரா வகையில் 10 வைடு உள்பட 13 ரன்களை விட்டுக்கொடுத்து விட்டனர். இதில் கச்சிதமாக செயல்பட்டிருந்தால் கோவை அணி 150 ரன்களுக்குள் அடங்கியிருக்கும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் அருண், ஹரிஷ்குமார் தலா 2 விக்கெட்டுகளும், அலெக்சாண்டர், எம்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 159 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ (0), விக்கெட் கீப்பர் கார்த்திக் (2 ரன்) இருவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்த மோசமான தொடக்கத்தில் இருந்து அணியை மீட்க சசிதேவ் (23 ரன்), எம்.அஸ்வின் (36 ரன்) போராடிய போதிலும் மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறினர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஓவர்களில் 105 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது. கோவை தரப்பில் மணிகண்டன் 3 விக்கெட்டுகளும், விக்னேஷ், அஜித்ராம், டி.நடராஜன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.