கிரிக்கெட்

திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி ‘திரில்’ வெற்றி + "||" + Match against Trichy Warriors Karaikudi Bull team win Thrill

திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி ‘திரில்’ வெற்றி

திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி ‘திரில்’ வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றியை ருசித்தது.
நெல்லை,

8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் நெல்லையில் நேற்றிரவு அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை, திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்சுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பரத் சங்கர் 11 ரன்களிலும், கேப்டன் இந்திரஜித் 3 ரன்னிலும் வெளியேறினர். இந்த வீழ்ச்சியில் இருந்து அணியை மீட்க சுரேஷ்குமார் (22 ரன்), வசந்த் சரவணன் (10 ரன்) போராடிய போதிலும் எதிரணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தனர்.


அதன் பிறகு கொத்து கொத்தாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 89 ரன்னுக்குள் 9 விக்கெட்டுகளை தாரைவார்த்த அந்த அணி மூன்று இலக்கத்தை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 10-வது வரிசையில் ஆடிய சஞ்சய் அதிரடியாக 28 ரன்கள் (17 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அணியை 100 ரன்களை கடக்க உதவினார். அவரது ஸ்கோரே அந்த அணியில் ஒரு வீரரின் அதிகபட்சமாகவும் அமைந்தது.

19.5 ஓவர்களில் திருச்சி அணி 114 ரன்களில் சுருண்டது. இந்த சீசனில் திருச்சி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். காரைக்குடி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மோகன்பிரசாத் 3 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர்கள் யோமகேஷ், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி காரைக்குடி காளை அணி ஆடியது. சிறப்பான தொடக்கம் கண்ட காரைக்குடி அணி 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது எளிதில் வாகை சூடும் என்றே நினைக்கத்தோன்றியது.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் சிறிது நேரத்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஆதித்யா 19 ரன்களிலும், கேப்டன் அனிருதா 41 ரன்களிலும் (28 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

இதன் பிறகு இறங்கிய பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் இறுதி கட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி ஓவரில் காரைக்குடி அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கணபதி வீசினார்.

கணபதியின் பந்து வீச்சை எதிர்கொண்ட யோ மகேஷ் -மோகன் பிரசாத் ஜோடி 5 பந்துகளில் வெற்றிக்குரிய ரன்களை எடுத்து திரிலிங்குக்கு முற்றுப்புள்ளி வைத்தது. காரைக்குடி அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியை காப்பாற்றிய யோமகேஷ் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக அவர் 7 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை திருச்சி வீரர்கள் நழுவ விட்டனர். 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திருச்சி சுழற்பந்து வீச்சாளர் சுரேஷ்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

4-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி அணிக்கு இது 3-வது வெற்றியாகும். திருச்சி சந்தித்த 2-வது தோல்வியாகும்.