இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது


இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 28 July 2018 11:15 PM GMT (Updated: 28 July 2018 8:40 PM GMT)

இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.

தம்புல்லா,

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கையின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த தென்ஆப்பிரிக்க அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்தில் உள்ள இலங்கை அணி அதே வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் வெளிப்படுத்தும் முனைப்புடன் உள்ளது. காயத்தில் இருந்து மீண்டு இலங்கை கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அணியை தயார்படுத்துவதற்கு இந்த தொடரில் சில சோதனை முயற்சிகளை மேற்கொள்வோம் என்று மேத்யூஸ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அதே சமயம் மறுபடியும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த தொடரில் பந்து வீசுவதில்லை என்று அவர் முடிவு வெடுத்துள்ளார். உள்ளூரில் ஆடுவது இலங்கை அணிக்கு சாதகமான அம்சமாகும்.

டெஸ்ட் தொடரில் திண்டாடிய தென்ஆப்பிரிக்க அணி ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று கருதப்படுவதால் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட வாய்ப்பு உள்ளது. பிளிஸ்சிஸ், அம்லா, டுமினி, டேவிட் மில்லர், டி காக் உள்ளிட்டோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இவ்விரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிய போது 5 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. அதில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்று விட்டார். சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் கடைசியாக சந்தித்த 10 ஒரு நாள் போட்டிகளில் 9-ல் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டிருக்கிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: குசல் பெரேரா, டிக்வெல்லா, தரங்கா, குசல் மென்டிஸ், மேத்யூஸ் (கேப்டன்), ஷனகா, திசரா பெரேரா, அகிலா தனஞ்ஜெயா, லக்மல், சன்டகன், கசுன் ரஜிதா.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), மார்க்ராம், டுமினி, டேவிட் மில்லர், வில்லியம் முல்டர், கேஷவ் மகராஜ், பெலக்வாயோ, ரபடா, ஷம்சி.

காலை 9.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story