கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டிபர்மிங்காமில் இன்று தொடக்கம் + "||" + India-England crash First Test match Start today in Birmingham

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டிபர்மிங்காமில் இன்று தொடக்கம்

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் போட்டிபர்மிங்காமில் இன்று தொடக்கம்
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
பர்மிங்காம், 

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம் வகிக்கும் இந்திய அணிக்கு, இந்த தொடர் மிகப்பெரிய ‘சோதனை’ களமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடுவது இது 18-வது முறையாகும். இதில் 1971-ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலும், 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலும் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றி இருந்தது.

கடைசியாக இங்கிலாந்தில் விளையாடிய இரு பயணங்களும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. 2011-ம் ஆண்டில் 0-4 என்ற கணக்கிலும், 2014-ம் ஆண்டில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி தொடரை தாரைவார்த்தது.

ஜொலிப்பாரா கோலி?

இந்த முறை விராட் கோலி தலைமை மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2014-ம் ஆண்டு தொடரில் 5 டெஸ்டில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்த விராட் கோலி அதற்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவார் என்று நம்பலாம். இதில் ரன்வேட்டை நடத்தி அசத்தினால், டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கோலி முதலிடத்திற்கு முன்னேறலாம். அவரை போல் புஜாரா, துணை கேப்டன் ரஹானே, முரளிவிஜய், தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் பேட்டிங்கில் மிளிர்ந்து அணியை தாங்கிப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக, இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அதுவும் ஆரம்பகட்டத்தில் பந்து ‘ஸ்விங்’ ஆகும். துல்லியமாக கணித்து செயல்படாவிட்டால் பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப் பகுதிக்கு கேட்சாக சீறும். அதிலும் மேகமூட்டமான வானிலை நிலவினால், பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகும். அதே சமயம் வெயிலால் ஆடுகளம் கொஞ்சம் வறண்டு காணப்பட்டால், பேட்டிங்குக்கு கைகொடுக்கும். அத்தகைய சூழலில் ஓரளவு சுழற்பந்து வீச்சும் எடுபடும். எது எப்படி என்றாலும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு, பொறுமையாக விளையாடுவதே புத்திசாலித்தனமாகும்.

கைமணிக்கட்டை பயன்படுத்தி சுழல்ஜாலம் காட்டக்கூடிய குல்தீப் யாதவ், குறுகிய வடிவிலான போட்டிகளில் அட்டகாசப்படுத்தினார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா காயம் அடைந்திருப்பது சற்று பின்னடைவு தான். அதனால் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி மீது கவனம் திரும்பியுள்ளது.

ஆண்டர்சன்-ஜோ ரூட்

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் அவர்களை தோற்கடிப்பது எப்போதும் கடினமாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த அணியின் பந்து வீச்சு துறைக்கு இரட்டை தூண்கள் ஆவர். இதுவரை 540 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் அனுபவசாலியான ஆண்டர்சன், பந்தை ‘ஸ்விங்’ செய்வதில் கில்லாடி. இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை மட்டும் அவர் 5 முறை கபளகரம் செய்திருக்கிறார்.

இந்த தொடரில் அவர் 24 விக்கெட்டுகளை சாய்த்தால், டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மெக்ராத்திடம் இருந்து தட்டிப்பறித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கிலும் இங்கிலாந்து வலுவாக விளங்குகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு, இந்தியாவுடன் ஆடுவது என்றாலே கொள்ளை பிரியம் என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவுடன் இதுவரை விளையாடியுள்ள 11 டெஸ்டுகளில் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது ஒரு அரைசதமாவது அடித்திருக்கிறார். இதே போல் மூத்த வீரர் அலஸ்டயர் குக், அதிரடி சூரர் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். எல்லா வகையிலும் இங்கிலாந்து அணி அச்சுறுத்தலாக தெரிவதால், இந்த தொடரில் இந்திய அணி கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆயிரமாவது போட்டி

எல்லாவற்றுக்கும் மேலாக இது இங்கிலாந்து அணி அடியெடுத்து வைக்கும் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் அணி இங்கிலாந்து தான். அதனால் சிறப்புமிக்க இந்த போட்டியை வெற்றியாக மாற்ற வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமாக வரிந்து கட்டி நிற்பார்கள்.

களம் காணும் லெவன் அணியை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று அறிவித்தார். மொயீன் அலி நீக்கப்பட்டுள்ளார். ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அடில் ரஷித் இடம் பெற்றுள்ளார். வெயில் வாட்டி வதைத்தாலும், கடந்த சில வாரங்களாக ஆடுகளத்தில் நன்கு தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு உலர்வாக இல்லாததால் ஒரே சுழற்பந்து வீச்சாளர் போதும் என்ற முடிவுக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் வந்துள்ளது.

இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணி தொடரை வெல்லமுடியாமல் போனாலும், குறைந்தது சமன் செய்தாலே அது மெச்சத்தகுந்த முடிவாக இருக்கும்.

அணி பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், குல்தீப் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா அல்லது முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், கீடான் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.