இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்ப்பு


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2018 10:45 PM GMT (Updated: 1 Aug 2018 9:42 PM GMT)

இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்ட இங்கிலாந்து அணி இறுதிகட்டத்தில் தடுமாறியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பர்மிங்காம், 

இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்ட இங்கிலாந்து அணி இறுதிகட்டத்தில் தடுமாறியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

புஜாரா நீக்கம்; குல்தீப் இல்லை

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இது சர்வதேச அரங்கில் இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்தது.

இந்திய அணியில் ஆச்சரியப்படும் வகையில் புஜாரா நீக்கப்பட்டார். கவுண்டி மற்றும் பயிற்சி ஆட்டத்தில் சோபிக்காததால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழல் காணப்பட்டதால் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக மூத்த வீரர் அஸ்வின் மட்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்தார். இதனால் சுழல் சூறாவளி குல்தீப் யாதவ் வெளியே உட்காரவைக்கப்பட்டார்.

நழுவிப்போன கேட்ச்

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அலஸ்டயர் குக்கும், கீடான் ஜென்னிங்சும் இங்கிலாந்து அணியின் இன்னிங்சை தொடங்கினர். உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மாறி மாறி தாக்குதல் தொடுத்தனர்.

ஜென்னிங்ஸ் 9 ரன்னில் இருந்த போது, இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை, 4-வது ஸ்லிப்பில் நின்ற ரஹானே நழுவ விட்டார். இதை 3-வது ஸ்லிப்பில் நின்ற கோலி பிடித்திருக்க வேண்டியது. அதற்குள் குறுக்காக பாய்ந்து ரஹானே வீணடித்து விட்டார். தொடக்க ஜோடியை, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில் அலஸ்டயர் குக் (13 ரன், 28 பந்து), கிளன் போல்டு ஆனார்.

ஷமி கலக்கல்

2-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஜோ ரூட் இறங்கினார். ரூட்டும், ஜென்னிங்சும் இந்திய பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை சேகரித்தனர். இஷாந்த் ஷர்மாவும், முகமது ஷமியும் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து ஓரளவு நெருக்கடி கொடுத்தனர். ஆனால் உமேஷ் யாதவின் பவுலிங் எடுபடவில்லை.

அணியின் ஸ்கோர் 98 ரன்களாக உயர்ந்த போது, முகமது ஷமியின் பந்து வீச்சில் ஜென்னிங்ஸ் (42 ரன், 98 பந்து, 4 பவுண்டரி) போல்டு ஆனார். அதாவது பந்து அவரது பேட்டில் பட்டு கால்களுக்கு இடையே ஊடுருவி ஸ்டம்பை தட்டியது. அடுத்து வந்த டேவிட் மலான் (8 ரன்) முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

ஜோ ரூட் ரன்-அவுட்

இதைத் தொடர்ந்து ஜோ ரூட்டுடன், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ கைகோர்த்தார். விக்கெட் சரிவை கருத்தில் கொண்டு இருவரும் நிதான போக்கை கடைபிடித்தனர். ஜோ ரூட் 107 பந்துகளில் தனது 41-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

ரூட்டும், பேர்ஸ்டோவும் நேர்த்தியாக ஆடி அணியை நிமிர வைத்தனர். இங்கிலாந்து வலுவான ஸ்கோரை நோக்கி பயணித்த நிலையில், இந்த கூட்டணி ரன்-அவுட்டில் உடைந்தது. 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடிய ஜோ ரூட்டை (80 ரன், 156 பந்து, 9 பவுண்டரி), விராட் கோலி துல்லியமாக ரன்-அவுட் ஆக்கினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்தது.

தகிடுதத்தம்

இதன் பிறகு இந்திய பவுலர்கள், இங்கிலாந்தை திணறடித்தனர். பேர்ஸ்டோ 70 ரன்களிலும் (88 பந்து, 9 பவுண்டரி), ஜோஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் 21 ரன்னிலும், அடில் ரஷித் 13 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் ஒரு ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்தியாவின் கை ஓங்கியது.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story