கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக 149 ரன்கள் குவிப்பு: ‘டெஸ்ட் போட்டியில் எனது 2–வது சிறந்த சதம்’ கேப்டன் விராட்கோலி கருத்து + "||" + 'Test match My 2nd Best Century ' Captain Viratowly commented

இங்கிலாந்துக்கு எதிராக 149 ரன்கள் குவிப்பு: ‘டெஸ்ட் போட்டியில் எனது 2–வது சிறந்த சதம்’ கேப்டன் விராட்கோலி கருத்து

இங்கிலாந்துக்கு எதிராக 149 ரன்கள் குவிப்பு: ‘டெஸ்ட் போட்டியில் எனது 2–வது சிறந்த சதம்’ கேப்டன் விராட்கோலி கருத்து
பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 149 ரன்கள் (225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) குவித்து ஆட்டம் இழந்தார்.

பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 149 ரன்கள் (225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) குவித்து ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மண்ணில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் போட்டியில் அவரது 22–வது சதம் இது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இந்திய கேப்டன் அடித்த 2–வது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1990–ம் ஆண்டில் இந்திய அணி கேப்டனாக இருந்த அசாருதீன் 179 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது. பர்மிங்காமில் சதம் அடித்த 2–வது இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட்கோலி பெற்றுள்ளார். 1996–ம் ஆண்டில் இதே மைதானத்தில் இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் 122 ரன்கள் எடுத்து இருந்தார். சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்ட கேப்டன் விராட்கோலிக்கு, ஷேவாக் உள்பட இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சதம் அடித்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரிய டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில், ‘என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள். மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அணிக்கு என்னால் எந்த அளவுக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு மட்டுமே தயாராகி வருகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் சிந்திக்காமல் அணிக்கு முன்னிலை தேடிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விளையாடினேன். அணி முன்னிலை பெறாத நிலையில் நான் ஆட்டம் இழந்தது ஏமாற்றம் அளித்தது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சோதனை அளிக்கும் போட்டி இதுவாகும். சவாலான இந்த போட்டியில் சதம் அடித்து அணியை எதிரணி ஸ்கோரின் நெருக்கத்துக்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி நிலை வீரர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்து நிலைத்து நின்றது பாராட்டுக்குரிய வி‌ஷயமாகும். 2014–ம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 2–வது இன்னிங்சில் அடித்த சதத்துக்கு (141 ரன்கள்) அடுத்தபடியாக இது தான் எனது சிறந்த டெஸ்ட் சதம் என்று நினைக்கிறேன். அடிலெய்டு சதம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அது சேசிங் செய்கையில் அடிக்கப்பட்டதாகும். இங்கு போட்டியிடவும், போராடவும் வந்து இருக்கிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’ என்று தெரிவித்தார்.