கோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்


கோலி வெல்ல முடியாதவர் அல்ல: கேட்ச்களை தவறவிட்டதே பின்னடைவுக்கு காரணம்: ஆண்டர்சன் சொல்கிறார்
x
தினத்தந்தி 4 Aug 2018 7:42 AM GMT (Updated: 4 Aug 2018 7:42 AM GMT)

கேட்ச்களை தவறவிட்டதே கோலி சதம் அடிக்க காரணம் என்ற ரீதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். #Virat Kohli #INDvsENG

பர்கிங்ஹாம், 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், இருபது ஓவர் போட்டித்தொடரை இந்திய அணியும் (2-1), ஒருநாள் போட்டித்தொடரையும் இங்கிலாந்து அணியும் கைப்பற்றின. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் விளையாடிய நிலையில், இந்திய அணிக்கு இந்தப்போட்டியில் வெற்றி பெற  194 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. 

194 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகளே கைவசம் உள்ளதால், இப்போட்டியின் முடிவு மதில் மேல் பூனையாக உள்ளது. இருப்பினும் விராட் கோலி 43 ரன்களுடன் களத்தில் இருப்பதால், இந்திய அணி வெற்றிக்கனியை பறிக்கும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்னதாக  முதல் இன்னிங்சிலும் விராட் கோலி சதம் அடித்து, இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார். 

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்து வரும் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் விராட் கோலிக்கும் கடும் நெருக்கடி அளித்தார். விராட் கோலி தனது முதல் இன்னிங்சில் 149 ரன்கள் குவிக்கும் முன்பாக இருமுறை தப்பி பிழைத்தார். 21 ரன்கள், 51 ரன்கள் என இருமுறை விராட் கோலி கொடுத்த வாய்ப்பை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் தவறவிட்டார். இந்த இருமுறையும் ஆண்டர்சனே பந்து வீசியது கவனிக்கத்தக்கது. 2-வது இன்னிங்சிலும் ஆண்டர்சன், விராட் கோலிக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறார். விராட் கோலி- ஆண்டர்சன் இடையேயான போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் நிலையில், நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஆண்டர்சன், விராட் கோலி வெல்ல முடியாத வீரர் இல்லை என்று சீண்டியுள்ளார். 

ஆண்டர்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “நான் இந்த போட்டியில் தற்போது வரை அவருக்கு (விராட்கோலி) பந்து வீசிய விதம் எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்துள்ளது. முதல் இன்னிங்சில் சில தடவை விராட் கோலிக்கு எட்ஜ் ஆனது. அடுத்த நாளில் 20 ரன்களில் விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்திருக்க கூடும். அவ்வாறு நடைபெற்று இருந்தால், விராட் கோலி எவ்வளவு திறமையானவர் என்று நாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டோம்.  விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனுக்கு நீங்கள் கேட்ச்களை தவறவிடக்கூடாது. ஏனெனில், தவறுகளில் இருந்து தன்னை கிரகித்துக்கொண்டு மீண்டும் வந்துவிடுவார். அதேதான் நடைபெற்றது. தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருந்து இருக்க முடியும். 

உலக கிரிக்கெட்டில் வெல்ல முடியாதவர் என யாருமே இல்லை. எனவே விராட் கோலியை எங்களால் ஆட்டமிழக்கச்செய்ய முடியும். நாளை (இன்று) எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை 25-30 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கு தெரிந்து விடும். எனவே, எங்கள் முழுத்திறமையும் நாங்கள் வெளிப்படுத்துவோம். முதல் இன்னிங்சில் விளையாடியதை போல விராட் கோலி, இன்றும் விளையாடினால், இந்தியா எளிதில் வென்று விடும். கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் போது கூட, அவர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். முதல் இன்னிங்சில் கடை நிலை பேட்ஸ்மேன்களுடன் விராட் கோலி ஆடிய விதம் அபாரமானது. ஐந்து விக்கெட்டுகளையும் விரைவாக  வீழ்த்த வேண்டியது அவசியம். இல்லையெனில் அவர் ரன்களை அடித்து விடுவார். முதல் 10-15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  வீழ்த்தி விடுவது அவசியம்” என்றார். மேலும், தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்தது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். 


Next Story