டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி 4-வது வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 4 Aug 2018 10:15 PM GMT (Updated: 4 Aug 2018 8:32 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.

நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.

26-வது லீக் ஆட்டம்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நெல்லையில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரிலேயே அருண் கார்த்திக் (1 ரன்) ஆட்டம் இழந்தார். 3-வது ஓவரில் கேப்டன் டி.ரோகித் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். கோவை கிங்ஸ் அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சில் மதுரை பாந்தர்ஸ் அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

104 ரன்கள் இலக்கு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்னே எடுத்தது. அதிகபட்சமாக கவுசிக் 32 ரன்னும் (28 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), வருண் சக்ரவர்த்தி 20 ரன்னும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அடுத்தபடியாக கார்த்திகேயன் 13 ரன் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். கோவை கிங்ஸ் அணி தரப்பில் விக்னேஷ் 2 விக்கெட்டும், நடராஜன், அஜித் ராம், ராஜேஷ், மனிகண்டன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய கோவை கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் அபினவ் முகுந்த் 12 ரன்னிலும், ஷாருக்கான் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆர்.ரோகித் 37 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 34 ரன்னும், வெங்கடராமன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

கோவை அணி 4-வது வெற்றி

கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய கோவை கிங்ஸ் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்கள் முடிவில் தான் அந்த அணி அடுத்த சுற்றுக்குள் நுழையுமா? அல்லது வெளியேறுமா? என்பது தெரியவரும். 5 வெற்றி பெற்றுள்ள மதுரை பாந்தர்ஸ் அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது.


Next Story