கிரிக்கெட்

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில்முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் விராட் கோலி + "||" + Test batsmen rankings For the first time 'number one' took place Virat Kohli

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில்முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் விராட் கோலி

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில்முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார் விராட் கோலி
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்.
துபாய், 

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார்.

கோலி முதலிடம்

பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இந்த போட்டியில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறியுள்ளார். பர்மிங்காம் டெஸ்டில் கடினமான சூழலில் 149 மற்றும் 51 ரன்கள் வீதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோலி அதன் மூலம் 31 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக சேகரித்தார். அதையும் சேர்த்து மொத்தம் 934 புள்ளிகளுடன் கோலி ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமர்ந்தார்.

7-வது இந்தியர்

இதையடுத்து கடந்த 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் ஆதிக்கம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அவர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பந்தை சேதப்படுத்திய புகாரில் ஓராண்டு தடையை அனுபவித்து வரும் ஸ்டீவன் சுமித் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு தான் சர்வதேச போட்டியில் ஆட முடியும் என்பது நினைவு கூரத்தக்கது.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த 76-வது வீரர், இந்திய அளவில் 7-வது வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றார். இந்தியர்களில் கடைசியாக 2011-ம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். இவர்களை தவிர்த்து ராகுல் டிராவிட், கவுதம் கம்பீர், சுனில் கவாஸ்கர், ஷேவாக், திலிப் வெங்சர்க்கார் ஆகிய இந்தியர்களும் ஏற்கனவே ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்துள்ளனர். 29 வயதான விராட் கோலி ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசையிலும் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களில் அதிக தரவரிசை புள்ளிகளை குவித்தவர் (934 புள்ளி) என்ற பெருமையையும் கோலி வசப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் 916 புள்ளிகள் பெற்றதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

விராட் கோலி, ஸ்டீவன் சுமித்தை விட 5 புள்ளி மட்டுமே தற்போது அதிகம் பெற்றிருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இதே போன்று கலக்கினால் தான் நம்பர் ஒன் இடத்தை தக்கவைக்க முடியும்.

சறுக்கிய விஜய், ரஹானே

இந்த டெஸ்டில் சொதப்பிய இங்கிலாந்து வீரர் அலஸ்டயர் குக் 17-வது இடத்திலும் (4 இடம் சரிவு), இந்தியாவின் லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), ரஹானே 22-வது இடத்திலும் (3 இடம் சறுக்கல்), முரளிவிஜய் (2 இடம் பின்னடைவு), ஷிகர் தவான் (ஒரு இடம் குறைவு) இருவரும் 25-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 884 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 14 புள்ளிகள் கூடுதலாக பெற்று இருக்கிறார். ஆனாலும் தரவரிசையில் மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் மாற்றமின்றி 26-வது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா), அஸ்வின் (இந்தியா), ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் உள்ளனர்.