இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்க வேண்டும் ஹர்பஜன்சிங் யோசனை


இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்க வேண்டும் ஹர்பஜன்சிங் யோசனை
x
தினத்தந்தி 8 Aug 2018 12:00 AM GMT (Updated: 7 Aug 2018 7:34 PM GMT)

லண்டன் லார்ட்சில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இங்கு இந்திய அணி இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும், 11-ல் தோல்வியும், 4-ல் டிராவும் கண்டுள்ளது.

1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2014-ம் ஆண்டு டோனி தலைமையில் 95 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து இருந்தது. இவர்களின் வரிசையில் விராட் கோலியும் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இங்கு இந்தியா தரப்பில் 11 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் வெங்சர்க்கார் மட்டும் 3 சதங்களை பதிவு செய்திருக்கிறார். தற்போதைய இந்திய துணை கேப்டன் ரஹானே கடந்த முறை இங்கு சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டது நினைவு கூரத்தக்கது.

இங்கிலாந்து அணி இங்கு 134 டெஸ்டுகளில் விளையாடி 53-ல் வெற்றியும், 32-ல் தோல்வியும், 49-ல் டிராவும் சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 1930-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 729 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். இங்கிலாந்து அணிக்கு 653 ரன்களும் (1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக), இந்திய அணிக்கு 454 ரன்களும் (1990-ம் ஆண்டு) இங்கு சிறந்த ஸ்கோராக உள்ளது.

லண்டனில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆடுகளத்தை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள பிட்ச் பராமரிப்பாளர் முயற்சித்து வருகிறார். ஈரப்பதத்துடன் கூடிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். நன்கு உலர்ந்து காணப்பட்டால், சுழற்பந்து வீச்சுக்கு உதவும். தற்போதைய சூழலை பார்த்தால், இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளருடன் களம் காண அதிக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி நிர்வாகமும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.

இதே யோசனையை இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கும் முன்வைத்துள்ளார். அவர் கூறும் போது, ‘பர்மிங்காம் டெஸ்டில் இந்திய அணி ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இறங்கியது தவறு. ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவையும் சேர்த்து இருக்கலாம். அங்கு வெயிலால் ஆடுகளம் உலர்வாக இருந்தது. ஆனால் இந்திய அணி, ஆடுகளத்தன்மையை சரியாக கணிக்க தவறிவிட்டது. இதே நிலைமை தான் லண்டனிலும் உள்ளது. அதனால் அஸ்வினுடன் 2-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும். அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுப்பார்’ என்றார்.

Next Story