கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல் + "||" + TNPL. Cricket In the exit round Coimbatore Kings wins In the 2nd rank Madurai clash with the team today

டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ் வெற்றி 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில் காரைக்குடி காளையை அடக்கிய கோவை கிங்ஸ் அணி இன்று நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மதுரை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நத்தம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நத்தத்தில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்றில், லீக் சுற்றில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த காரைக்குடி கேப்டன் அனிருதா, கோவை அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார்.


இதையடுத்து முதலில் பேட் செய்த கோவை வீரர்கள், எதிரணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஷாருக்கான் 14 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரோகித் 4 ரன்னிலும், அந்தோணி தாஸ் 8 ரன்னிலும் வீழ்ந்தனர். இதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அபினவ் முகுந்த் தாக்குப்பிடித்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டு கவுரவமான நிலைக்கு கொண்டு சென்றார். தனது பங்குக்கு 51 ரன்கள் (46 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த அவர் ரன்-அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி வேகப்பந்து வீச்சாளர் ராஜ்குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் களம் இறங்கிய காரைக்குடி பேட்ஸ்மேன்களுக்கு, கோவை பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். அந்த அணியின் முன்னணி வீரர்கள் கேப்டன் அனிருதா (11 ரன்), ஆதித்யா (3 ரன்), சீனிவாசன் (3 ரன்), கவின் (1 ரன்), யோமகேஷ் (2 ரன்) அடுத்தடுத்து நடையை கட்டினர். 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த காரைக்குடி அணியை, மான் பாப்னா மீட்டெடுக்க போராடினார். நிலைத்து நின்று ஆடிய அவருக்கு மறுபக்கம் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

கோவை அணியை அச்சுறுத்திய பாப்னா (40 ரன், 38 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) 18-வது ஓவரில் நடராஜனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அத்துடன் காரைக்குடி அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. காரைக்குடி அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டு வெளியேறியது. இதன் மூலம் கோவை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு, 2-வது தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. கோவை தரப்பில் நடராஜன் 4 விக்கெட்டுகளும், விக்னேஷ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதே மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்ஸ் அணி, மதுரை பாந்தர்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.