கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 10 Aug 2018 11:00 PM GMT (Updated: 10 Aug 2018 9:01 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்சை வீழ்த்தி மதுரை அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நத்தம்,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. நத்தத்தில் (திண்டுக்கல்) நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கோவை கிங்சும், மதுரை பாந்தர்சும் மோதின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த கோவை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாருக்கான் (4 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வாரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரோகித் (5 ரன்) தன்வாரின் இன்னொரு ஓவரில் வீழ்ந்தார்.

மதுரை அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன் திரட்ட முடியாமல் கோவை பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அந்த அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பிற்பகுதியில் தான் சற்று வேகம் காட்டினர். கேப்டன் அபினவ் முகுந்த் 28 ரன்களிலும், அந்தோணி தாஸ் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர். இதைத் தொடர்ந்து வெங்கட்ராமனும், ராஜேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 18-வது ஓவரை வீசிய ஜே.கவுசிக்கின் பந்து வீச்சில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி 100 ரன்களை கடக்க வைத்தனர்.

அணியின் ஸ்கோரை கொஞ்சம் சவாலான நிலைக்கு கொண்டு செல்ல உதவிய ராஜேஷ் 29 ரன்களிலும் (24 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெங்கட்ராமன் 45 ரன்களிலும் (50 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஜித் ராம் (7 ரன்) கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் கோவை அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மதுரை தரப்பில் தன்வார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக இறுதி சுற்றை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 79 ரன்கள் (56 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

Next Story