டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்?


டி.என்.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார்?
x
தினத்தந்தி 11 Aug 2018 11:30 PM GMT (Updated: 11 Aug 2018 7:44 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), மதுரை பாந்தர்ஸ் (5 வெற்றி, 2 தோல்வி), கோவை கிங்ஸ் (4 வெற்றி, 3 தோல்வி), காரைக்குடி காளை (4 வெற்றி, 3 தோல்வி) அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

நத்தத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை சாய்த்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

சாம்பியன் கோப்பையை வெல்வது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் கோதாவில் இறங்குகின்றன.

திண்டுக்கல் அணியில் கேப்டன் ஜெகதீசன் (345 ரன்கள்), விவேக் (249 ரன்கள்), ஹரிநிஷாந்த் (249 ரன்கள்) ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது, அபினவ் தலா 8 விக்கெட்டுகள் கைப்பற்றி இருப்பதுடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

மதுரை பாந்தர்ஸ் அணியில் அருண் கார்த்திக் 5 அரைசதம் உள்பட 397 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். தலைவன் சற்குணம் (191 ரன்கள்), ஷிஜித் சந்திரன் (175 ரன்கள்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளனர். பந்து வீச்சில் அபிஷேக் தன்வார் (11 விக்கெட்), ஜே.கவுசிக் (9 விக்கெட்), வருண் சக்ரவர்த்தி (7 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சில் மிரட்டுகிறது. தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி கோப்பையை வெல்ல திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மதுரை அணியினர் வரிந்து கட்டுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. 4 முறையும் திண்டுக்கல் அணியே வெற்றி கண்டுள்ளது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கக்கூடும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத், முகமது, ஆர்.ரோகித், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாக், வருண் தோதாத்ரி.

மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன், தலைவன் சற்குணம், ஜே.கவுசிக், அபிஷேக் தன்வார், நிலேஷ் சுப்பிரமணியன், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா, லோகேஷ் ராஜ், கார்த்திகேயன்.

கேப்டன்கள் சொல்வது என்ன?


மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் டி.ரோகித் கூறுகையில் ‘இந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் புதிய அணியாகும். நிர்வாகமும் புதிதாகும். நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடினோம். அதன் மூலம் இந்த நிலைக்கு வந்து இருக்கிறோம். அருண் கார்த்திக் அற்புதமான வீரர். அவர் பேட்டிங்கில் மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பதுடன் அணிக்கு உந்து சக்தியாகவும் இருந்து வருகிறார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டது என்பதை அறிவோம். அதே சமயம் எங்களது அணி சரியான கலவையில் இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் 180 ரன் இலக்கையும் ‘சேசிங்’ செய்து இருக்கிறோம். 115 ரன்னை வைத்து கொண்டும் வெற்றி பெற்று இருக்கிறோம். இதனால் இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் கூறுகையில் ‘நடப்பு டி.என்.பி.எல். தொடர் உண்மையிலேயே சிறப்பாக உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் தான் முடிவானது. அந்த அளவுக்கு போட்டி வலுவடைந்துள்ளது. விவேக் அதிரடியாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர். அவரை போன்ற ஒரு வீரரை வைத்து கொள்ள எல்லா அணிகளும் விரும்பும். எங்கள் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான அஸ்வின் முதல் 3 ஆட்டங்களில் வழிநடத்தியது எல்லோருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அவர் எங்களுடன் இருந்த போது அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அவர் அணியின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் ஆலோசனை வழங்க கூடியவர். அவர் தற்போது இங்கிலாந்து தொடரில் விளையாடினாலும் அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து ஆலோசனை அளிக்கிறார்’ என்றார்.

Next Story