இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி
x
தினத்தந்தி 12 Aug 2018 11:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:20 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 107 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்ற சூழலில் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய இங்கிலாந்து அணி, சாம் குர்ரன் (40 ரன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்ததும் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களுடன் (177 பந்து, 21 பவுண்டரி) களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 289 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி நெருக்கடிக்கு மத்தியில் 2-வது இன்னிங்சை ஆடிய போது மேகமூட்டமான சூழல் உருவானது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த சீதோஷ்ண நிலையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் கன கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு அச்சுறுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காலி செய்தார். 9 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மழை நீடித்ததால் அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது.

ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு இந்திய அணியின் போக்கு அமைந்து விட்டது. மழை ஓய்ந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது துணை கேப்டன் ரஹானே (13 ரன்), புஜாரா (17 ரன்) ஆகியோரை இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வெளியேற்றினார். இதில் புஜாரா 87 பந்துகளை எதிர்கொண்டு மிக பொறுமையாக ஆடினார். ஆனாலும் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ‘இன்ஸ்விங்கர்’ பந்து, ஸ்டம்பை பதம் பார்த்து விட்டது.

முந்தைய நாள் லேசான முதுகுவலியால் அவதிப்பட்ட கேப்டன் விராட் கோலி சிகிச்சை எடுத்துக் கொண்டு 5-வது வரிசையில் இறங்கினார். இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிய கோலி (17 ரன்) அருகில் நின்ற ஆலிவர் போப்பிடம் கேட்ச் ஆனார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். முன்னணி தலைகள் அடுத்தடுத்து உருண்டதால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.

32 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 66 ரன்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்தில் வருணபகவான் வழியிட, ஆட்டம் தொடர்ந்து நடந்தது.

ஹர்திக் பாண்ட்யா (26 ரன்), அஸ்வின் (33 ரன், நாட்-அவுட்) இருவரின் சிறிது நேர ‘தாக்குப்பிடிப்பு’ தோல்வியை கொஞ்ச நேரம் தள்ளிவைக்க மட்டுமே உதவியது. முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 47 ஓவர்களில் 130 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

வெற்றியையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதலாவது டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை

லண்டன் லார்ட்சில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் முரளிவிஜயின் (0) விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்ன் கபளகரம் செய்தார். இது லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சன் கைப்பற்றிய 100-வது விக்கெட் (23 டெஸ்ட்) ஆகும். இதன் மூலம் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ‘விக்கெட்டில் செஞ்சுரி’ போட்ட முதல் வீரர் என்ற மகத்தான பெருமையை 36 வயதான ஆண்டர்சன் பெற்றார்.

அத்துடன் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரராகவும் ஆண்டர்சன் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் கொழும்பு எஸ்.எஸ்.சி. (166 விக்கெட்), கண்டி (117 விக்கெட்), காலே (111 விக்கெட்) ஆகிய மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்து இருக்கிறார்.

விஜயின் பரிதாபம்

* இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் 7-வது வரிசையில் இறங்கி 137 ரன்கள் சேர்த்தார். இந்தியாவுக்கு எதிராக 7-வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் வோக்ஸ் தான்.

* முரளிவிஜய் இரண்டு இன்னிங்சிலும் ரன் ஏதுமின்றி டக்-அவுட் ஆனார். ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் டக்-அவுட் ஆவது இது 6-வது நிகழ்வாகும். பங்கஜ் ராய், பரூக் என்ஜினீயர், வாசிம் ஜாபர், ஷேவாக், ஷிகர் தவான் ஆகியோர் முந்தைய அவப்பெயருக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

* விஜயின் விக்கெட்டை இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தியது இது 7-வது முறையாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விஜய்க்கு அதிக முறை ‘செக்’ வைத்த பவுலர் ஆண்டர்சன் தான்.

* இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி காண்பது இது 14-வது முறையாகும்.

* விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சந்தித்த முதல் இன்னிங்ஸ் தோல்வி இதுவாகும்.

*இந்திய அணியின் இரண்டு இன்னிங்சிலும் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தவர் அஸ்வின் (29 மற்றும் 33 ரன்). 8-வது மற்றும் அதற்கு கீழ் வரிசையில் இறங்கி இரு இன்னிங்சிலும் டாப் ஸ்கோரை பெற்ற முதல் இந்தியர் அஸ்வின் தான்.

விராட் கோலி விரக்தி

தோல்வி குறித்து  இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “நாங்கள் விளையாடிய விதத்தை வைத்து எந்த வகையிலும் பெருமைப்பட்டு கொள்ள முடியாது. கடைசியாக ஆடிய 5 டெஸ்டுகளில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்ட போட்டி இது தான். நாங்கள் ஆடிய விதத்தை பார்க்கும் போது, தோல்விக்கு நாங்கள் தகுதியான அணி தான். எல்லா சிறப்பும் இங்கிலாந்து வீரர்களையே சாரும்” என்று கூறினார்.

Next Story