இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்
x
தினத்தந்தி 13 Aug 2018 11:30 PM GMT (Updated: 13 Aug 2018 10:23 PM GMT)

‘இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நமது ஆடும் லெவன் அணி தேர்வில் சிறிய தவறு நடந்து விட்டது’ என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

லண்டன்,

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான டெஸ்ட் தோல்வி இதுவாகும்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ்வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின் (29 ரன்கள், ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள்) தான் அதிகபட்ச ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருந்த சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் அணிக்கு எந்தவித பங்களிப்பும் அளிக்காமல் மோசமான வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்து இருந்த அவர் இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் செய்யவில்லை. பீல்டிங்கின் போது ரன்-அவுட் செய்யவில்லை. கேட்ச் எதுவும் பிடிக்கவில்லை. இதன் மூலம் கடந்த 13 ஆண்டுகளில் வெற்றி பெற்ற டெஸ்ட் அணியில் இடம் பிடித்து எத்தகைய பங்களிப்பும் செய்யாமல் இருந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற அவப்பெயரை அடில் ரஷித் சம்பாதித்தார்.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் நாங்கள் சிறிய தவறு செய்து விட்டோம். அடுத்த டெஸ்ட் போட்டியில் அந்த தவறை சரி செய்ய எங்களுக்கு வாய்ப்பு உள்ளது. போட்டி தொடரில் நாங்கள் 0-2 என்ற நிலையில் இருந்து மீண்டு வந்து போட்டி தொடரை விறுவிறுப்பாக மாற்ற வேண்டும் என்றால் நடந்தவற்றை மறந்து நேர்மறையான நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

பேட்ஸ்மேன்களிடம் ஆட்ட நுணுக்கத்தில் எந்தவித குறையும் இருப்பதாக தெரியவில்லை. மனரீதியாக தான் அதிக பிரச்சினை இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையால் பந்து வீச்சில் தாக்கம் இருந்தால் அதனை எதிர்கொண்டு சமாளிக்க தெளிவான எண்ணத்துடன் வீரர்கள் செயல்பட வேண்டும். ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி செயல்பட வீரர்கள் தங்களை உடனடியாக தயார்படுத்தி கொள்ள வேண்டும். தட்பவெப்ப நிலையை நாம் கட்டுப்படுத்த முடியாது.

தட்பவெப்ப நிலை குறித்து அதிகம் சிந்தித்தால் நமது வருங்கால ஆட்ட திட்டங்களை வகுக்க முடியாது. நடந்த சம்பவம் குறித்து அதிகம் நினைத்தால் அதில் இருந்து நாம் எந்தவித ஆதாயமும் பெற முடியாது. அடுத்த ஆட்டம் குறித்து தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆட்டத்தில் நாம் செய்த தவறை பார்ப்பதுடன் அதனை திருத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும். அதுதவிர விளையாட்டு வீரர்களுக்கு வேறு வழி கிடையாது.

இந்த டெஸ்டில் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. தொடக்கத்தில் நமது பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் அதனை நாம் நிலையாக செய்யவில்லை. பேட்டிங்கில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்தது போன்று இந்த டெஸ்ட் போட்டியில் எனக்கு முதுகுவலி பெரும் பிரச்சினையாக இருந்தது. அடுத்த போட்டிக்கு முன்பாக உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று விடுவேன் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் எந்த பேட்ஸ்மேனையும் குறை சொல்ல விரும்பவில்லை.

என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் செயல்பட வேண்டும். அப்படி எல்லோரும் செயல்பட்டால் அணியை வெற்றி பெற வைக்க முடியும். நமது தவறை ஒப்புக்கொள்ளாவிட்டால் முன்னேற்றம் காண முடியாது. கடைசியாக நாங்கள் ஆடிய 5 டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக வீழ்த்தப்பட்ட போட்டி இது தான். நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் ஒருசேர சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

Next Story