3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: கங்குலியை முந்தினார், கோலி


3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: கங்குலியை முந்தினார், கோலி
x
தினத்தந்தி 22 Aug 2018 11:15 PM GMT (Updated: 22 Aug 2018 9:05 PM GMT)

3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் மூலம் விராட் கோலி, முன்னாள் கேப்டன் கங்குலியை முந்தினார் .


* இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் இதுவரை 38 டெஸ்டுகளில் பங்கேற்று அதில் 22-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 9-ல் டிராவும் கண்டுள்ளது. இதன் மூலம் டெஸ்டில் அதிக வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன்களின் வரிசையில் 2-வது இடத்தில் இருந்த சவுரவ் கங்குலியை (21 வெற்றி, 49 டெஸ்ட்) முந்தினார். இந்த வகையில் 27 வெற்றிகளுடன் டோனி (60 டெஸ்ட்) முதலிடம் வகிக்கிறார்.

* நாட்டிங்காம் மைதானத்தில் இந்திய அணியின் 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே 2007-ம் ஆண்டில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கு இங்கு வெற்றி கிட்டியிருந்தது.

* ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் 3-வது பெரிய வெற்றி (203 ரன் வித்தியாசம்) இதுவாகும். ஏற்கனவே 1986-ம் ஆண்டு ஹெட்டிங்லேயில் நடந்த டெஸ்டில் 279 ரன்கள் வித்தியாசத்திலும், 2016-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்டில் 246 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது.

* தொடரில் முதல் இரு டெஸ்டுகளில் தோல்வி அடைந்து அதன் பிறகு எழுச்சி பெற்று 3-வது டெஸ்டில் இந்தியா வெற்றி காண்பது இது 5-வது நிகழ்வாகும்.

தனது இன்னிங்சை மனைவிக்கு அர்ப்பணித்த கோலி

இந்த டெஸ்டில் 97, 103 ரன்கள் வீதம் விளாசிய இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவர் கூறுகையில், ‘ஆட்டநாயகன் விருதுக்குரிய எனது இரு இன்னிங்சையும் எனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு நிறைய உத்வேகம் அளிக்கிறார். தொடர்ந்து அளித்துக் கொண்டு இருக்கிறார். எத்தகைய சூழலிலும், ‘நம்மால் முடியும் மனம் தளரக்கூடாது’ என்று எனக்கு பக்கபலமாக இருந்து நம்பிக்கை அளிப்பவர் அவர் மட்டுமே. இந்த பாராட்டுக்கு அவர் தகுதியானவர்’ என்றார்.

‘வெளிநாட்டு மண்ணில் சிறந்த வெற்றி’ - ரவிசாஸ்திரி

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நெருங்கி வந்து தோற்றோம். 2-வது டெஸ்டில் அவர்கள் எங்களை ஊதித்தள்ளினர். அதனால் எங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எங்களது வீரர்களிடம், ‘கொஞ்சம் பொறுப்புணர்வுடன் ஆடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மூன்று துறைகளிலும் (பேட்டிங், பவுலிங், பீல்டிங்) வியப்புக்குரிய வகையில் விளையாடி இருக்கிறார்கள். ஒரு தலைமை பயிற்சியாளராக இதற்கு மேல் அவர்களிடம் இருந்து எதுவும் கேட்க முடியாது. வீரர்களை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக நான் இந்த பணியில் இருக்கிறேன். எனது பயிற்சி காலத்தில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வெற்றியாக இதை கருதுகிறேன்’ என்றார்.

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விஜய், குல்தீப் நீக்கம் - பிரித்வி ஷா, விஹாரி சேர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகள் சவுதம்டன் (ஆக.30-செப்.3), லண்டன் (செப்.7-11) ஆகிய நகரங்களில் நடக்கிறது. இவ்விரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. முதல் இரு டெஸ்டில் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதுமுகங்கள் மும்பையைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் 18 வயதான பிரித்வி ஷா, ஆந்திராவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் 24 வயதான ஹனுமா விஹாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

18 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷாப் பான்ட், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், கருண்நாயர், தினேஷ் கார்த்திக், ஹனுமா விஹாரி.

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக 4 நாள் போட்டியில் விளையாடும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியில் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.



Next Story