இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம்


இந்தியா–இங்கிலாந்து மோதும் 4–வது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 29 Aug 2018 9:30 PM GMT (Updated: 29 Aug 2018 7:35 PM GMT)

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.

சவுதம்டன், 

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்தும், நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் உள்ள ரோஸ் பவ்ல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஒரு வார கால ஓய்வுக்கு பிறகு இரு அணி வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்குகிறார்கள்.

விராட் கோலி

முதல் இரு டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி 3–வது டெஸ்டில் பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் மூன்று துறையிலும் எழுச்சி பெற்று, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. அதில் கேப்டன் விராட் கோலி 97 மற்றும் 103 ரன்கள் வீதம் விளாசினார். பந்து வீச்சில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஜொலித்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இரு இன்னிங்சிலும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து நல்ல பார்ட்னர்ஷிப் தந்தனர். அதே போல் இன்றைய டெஸ்டிலும் சிறப்பான தொடக்கம் தந்தால், இந்தியா கணிசமாக ஆதிக்கம் செலுத்த முடியும்.

இந்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. விராட் கோலி கேப்டன் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி ஒரு போதும் அடுத்தடுத்த டெஸ்டுகளில் மாற்றமின்றி களம் இறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி இன்னும் 6 ரன் எடுத்தால் டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 10–வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

சாதனை நோக்கி ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இந்த போட்டியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள். கைவிரலில் காயமடைந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஓரளவு குணமடைந்து விட்டார். இருந்தாலும் இந்த டெஸ்டில் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருவார், விக்கெட் கீப்பிங் பணியை ஜோஸ் பட்லர் கவனிப்பார் என்று கேப்டன் ஜோ ரூட் அறிவித்துள்ளார்.

தொடையில் காயமடைந்துள்ள கிறிஸ் வோக்சுக்கு பதிலாக சாம் குர்ரனும், ஆலிவர் போப்புக்கு பதிலாக மொயீன் அலியும் இடம் பெறுகிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னும் 7 விக்கெட் வீழ்த்தினால், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். இந்த டெஸ்டில் அந்த மைல்கல்லை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த மைதானத்தில் இதுவரை 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளன. 2011–ம் ஆண்டில் இலங்கையுடன் டிரா செய்த இங்கிலாந்து அணி 2014–ம் ஆண்டில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது. இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் குர்ரன், அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

இந்தியா: தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பான்ட், அஸ்வின், முகமது ‌ஷமி, இஷாந்த் ‌ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story