யார் இந்த ‘ஹனுமா விஹாரி’..?


யார் இந்த ‘ஹனுமா விஹாரி’..?
x
தினத்தந்தி 1 Sep 2018 7:22 AM GMT (Updated: 2018-09-01T12:52:22+05:30)

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், எஞ்சிய போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பில் ஹனுமா விஹாரி என்ற பெயரையும் பார்க்க முடிந்தது. பிரபலமில்லாத வீரராக அறியப்படும் விஹாரி, பல பிரமிக்கத்தக்க செயல்களுக்கு சொந்தக்காரர். அதை படிக்கலாம் வாங்க...

1. ஹனுமா விஹாரி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர். வலது கை ஆட்டக்காரர், ‘ஆப் பிரேக்’ பவுலிங்கிலும் அசத்தக்கூடியவர்.

2. 19 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆந்திர வீரர் என்ற பெருமையுடன், விஹாரி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். இதற்கு முன்னர் டெஸ்ட் அணியில் விளையாடிய எம்.எஸ்.கே. பிரசாத்திற்கு பிறகு, விஹாரிதான் ஆந்திராவின் புதிய அடையாளம்.

3. இவர் தன்னுடைய 17 வயதிலேயே ரஞ்சி கிரிக்கெட் போட்டி களில் விளையாடியிருக்கிறார்.

4. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பையை, உன்முக் சந்த் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியபோது, அதில் ஹனுமா விஹாரியும் ஒரு அங்கமாக விளங்கினார். இந்த வெற்றிக்கு பிறகு உன்முக் சந்தும், விஹாரியும் கிரிக்கெட் உலகில் இருந்து காணாமல் போனது வேறு விஷயம்.

5. ஐ.பி.எல். போட்டிகளில் 2013-ம் ஆண்டு அறிமுகமான ‘சன் ரைசர்ஸ் ஐதராபாத்’ அணியில் விஹாரி சேர்க்கப்பட்டார். இருப்பினும் மோசமான ஆட்டம் காரணமாக விரைவிலேயே கழற்றிவிடப்பட்டார். பிறகு அடுத்தடுத்த சீசன்களில் ஐதராபாத் அணியிலேயே அங்கம் வகித்தார்.

6.ஐ.பி.எல். போட்டிகளில் கிடைத்த ஒருசில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய விஹாரி, 280 ரன்களை சேர்த்தார். அத்துடன் அபாயகரமான ஆட்டக்காரர் என அறியப்படும் கிறிஸ் கெயிலின் விக்கெட்டையும் ஒருமுறை வீழ்த்தியிருக்கிறார்.

7. ஐ.பி.எல்.போட்டிகளில் சொதப்பினாலும், மாநிலங் களுக்கு இடையிலான போட்டிகளில் ஐதராபாத் அணியின் நம்பிக்கை தூண் இவரே. மேலும் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலும் அசத்தி இருக்கிறார். 2017-2018 ஆண்டுகளில் ஆந்திராவிற்காக விளையாடி 752 ரன்களை குவித்திருக்கும் விஹாரி, நல்ல ‘ஆவெரேஜை’யும் வைத்திருக்கிறார். அதனால்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க அழைப்பு வந்தது.

8. தற்போது ‘இந்திய பி’ அணியில் நுழைந்திருக்கும் விஹாரி, இதுநாள் வரை ‘இந்திய ஏ’ அணியிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். பல நாடுகளுக்கு பயணித்து, திறமையான பல அணிகளை சந்தித்திருக்கிறார். இந்த அனுபவம், இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் கை கொடுக்கும் என நம்பலாம்.

9. முதல் தர போட்டிகளில் விஹாரி விளையாடிய விதம், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நிகராக இருக்கிறதாம். இவரது முதல் தர கிரிக்கெட்டின் ஆவெரேஜ், 59.45 என்ற அளவில் இருப்பதால், இந்திய தேர்வாளர் களின் கண்களில் விஹாரி பளிச்சிட்டிருக்கிறார்.

10. குறிப்பாக ‘இந்திய ஏ’ அணியில் இடம்பிடித்திருந்த விஹாரி, இந்த வருடம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்தின் எஸ்எஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருக்கிறார். களம் கண்ட ஆட்டங்களில் எல்லாம் சதம் கண்டதால், விஹாரியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் அசத்தலாக விளையாடிய கள அனுபவம் இருப்பதால்தான் அனுபவமிக்க வீரர் களையும் ஓரங்கட்டிவிட்டு, ஹனுமா விஹாரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பல எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்து சென்றிருக்கும் விஹாரிக்கு அதிர்ஷ்டமும், திறமையும் கை கொடுக்க, வாழ்த்துவோம். 

Next Story