இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: சரிவை சமாளித்தது இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது


இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: சரிவை சமாளித்தது இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை பெற்றது
x
தினத்தந்தி 1 Sep 2018 10:00 PM GMT (Updated: 2018-09-02T01:19:16+05:30)

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சரிவை சமாளித்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சவுதம்டன், 

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சரிவை சமாளித்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்தின் (132 ரன், நாட்-அவுட்) உதவியுடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். அலஸ்டயர் குக் (12 ரன்), மொயீன் அலி (9 ரன்), ஜென்னிங்ஸ் (36 ரன்), ஜானி பேர்ஸ்டோ (0) சீரான இடைவெளியில் நடையை கட்டினர். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஜோ ரூட் (48 ரன், 88 பந்து, 6 பவுண்டரி) முகமது ஷமியால் ரன்-அவுட் செய்யப்பட்டார். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 122 ரன்களுடன் ஊசலாடியது.

இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள்

இதன் பிறகு பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க பொறுமையாக விளையாடினர். வலுவான முன்னிலை பெற வைக்க போராடிய இவர்கள் ஸ்கோர் 178 ரன்களை எட்டிய போது பிரிந்தனர். பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களில் (110 பந்து, 2 பவுண்டரி) அஸ்வினின் சுழலில் ஆட்டம் இழந்தார். அணியின் ஸ்கோர் 233 ரன்னாக உயர்ந்த போது ஜோஸ் பட்லர் (69 ரன்கள், 122 பந்துகளில் 7 பவுண்டரியுடன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.

அடுத்து அடில் ரஷித், சாம் குர்ரனுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய அடில் ரஷித் (11 ரன்) முகமது ஷமி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டிடம் கேட்ச் ஆனார். தொடக்க சரிவை சமாளித்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2-வது இன்னிங்சில் 91.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து சவாலான ஸ்கோரை எட்டியது. சாம் குர்ரன் 37 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

233 ரன்கள் முன்னிலை

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணி கைவசம் 2 விக்கெட் உள்ளது.

Next Story