கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஓய்வு + "||" + Indian cricketer RP Singh retires

இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஓய்வு
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடக்கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர், ஆர்.பி.சிங். 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்ட ஆர்.பி.சிங் அதன் பிறகு ஐ.பி.எல். மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.


இந்த நிலையில் அவர் எல்லா வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள பதிவில், ‘13 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (செப்.4) இந்திய அணிக்காக முதல்முறையாக கால்பதித்தேன். எனது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத தருணம் அது. இப்போது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். எனது கிரிக்கெட் பயணத்திற்கு வித்திட்ட, உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று அதில் கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஆர்.பி.சிங் 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகம் ஆனார். 14 டெஸ்டுகளில் விளையாடி 40 விக்கெட்டுகளும், 58 ஒரு நாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளும், 10 இருபது ஓவர் போட்டிகளில் 15 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றதில் ஆர்.பி.சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அந்த ஆட்டத்தில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதே ஆண்டில் இங்கிலாந்து மண்ணில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றதிலும் முக்கிய பங்கு வகித்த ஆர்.பி.சி. அந்த தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

ஆர்.பி.சிங்குக்கு புகழாரம் சூட்டியுள்ள ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சிறிய ஊரில் இருந்து வந்து இந்தியாவுக்காக விளையாடி சாதித்ததை நினைத்து நீ பெருமைப்பட வேண்டும் சகோதரா’ என்று கூறியுள்ளார்.