கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறல் + "||" + Last Test cricket: Indian team wicket losses

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறல்

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறல்
கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
லண்டன்,

லண்டன் ஓவலில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 6 முன்னணி விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. அலஸ்டயர் குக் (71 ரன்), மொயீன் அலி (50 ரன்) ஆகியோரின் அரைசதங்களால் சிறப்பான தொடக்கம் கண்ட இங்கிலாந்து அணி கடைசி கட்டத்தில் சரிவுக்குள்ளானது. முதல் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர்(11 ரன்), அடில் ரஷித் (4 ரன்) களத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. அடில் ரஷித் 15 ரன்னில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் பட்லருடன், ஸ்டூவர்ட் பிராட் கைகோர்த்தார். அவர்களின் இன்னிங்சை சீக்கிரமாக இந்திய பவுலர்கள் முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இங்கிலாந்தின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் இந்தியாவுக்கு மீண்டும் குடைச்சல் கொடுத்தனர்.

பட்லரும், பிராட்டும் இந்திய பந்து வீச்சை எளிதில் சமாளித்து துரிதமாக ரன்களை திரட்டினர். இவர்களுக்கு நமது பவுலர்களால் பெரிய அளவில் தொல்லை கொடுக்க முடியவில்லை. முதல் நாளில் ஆமை வேகத்தில் நகர்ந்த ரன்விகிதம், நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. 250-ல் இருந்து 300 ரன்களை 60 பந்தில் கொண்டு வந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராட் (38 ரன், 59 பந்து, 3 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சை தூக்கியடித்த போது லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனார். பட்லர்-பிராட் ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் வந்தார். மறுமுனையில் பும்ராவின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை பறக்க விட்ட பட்லர், கடைசியில் ஜடேஜாவின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் சிக்கினார். 10-வது அரைசதத்தை எட்டிய பட்லர் 89 ரன்கள் (133 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 122 ஓவர்களில் 332 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். எக்ஸ்டிரா வகையில் 26 பைஸ் உள்பட இந்தியா 35 ரன்களை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் (3 ரன்) 2-வது ஓவரிலேயே பிராட்டின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி, நடையை கட்டினார். அதைத் தொடர்ந்து இணைந்த லோகேஷ் ராகுலும், புஜாராவும் ஈடுகொடுத்து விளையாடி அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது ராகுல் (37 ரன், 53 பந்து, 4 பவுண்டரி) சாம் குர்ரனின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி அடியெடுத்து வைத்தார். கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய புஜாரா 37 ரன்களில் (101 பந்து, 5 பவுண்டரி) ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரஹானே (0) ஆண்டர்சனின் ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு இரையானார்.

இதன் பின்னர் கேப்டன் கோலியும், புதுமுக வீரர் ஹனுமா விஹாரியும் அணியை சற்று தூக்கி நிறுத்துவது போல் தெரிந்தது. ரன்சேர்ப்பில் சற்று வேகம் காட்டிய நேரத்தில் இந்த ஜோடிக்கு பென் ஸ்டோக்ஸ் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் கோலி (49 ரன், 70 பந்து, 6 பவுண்டரி) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார். அவருக்கு பிறகு வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (5 ரன்) நிலைக்கவில்லை.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 51 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களுடன் திணறிக்கொண்டிருக்கிறது. ஹனுமா விஹாரி (25 ரன்), ஜடேஜா (8 ரன்) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த டெஸ்டில் தற்போது இங்கிலாந்து அணியின் கை வலுவாக ஓங்கி நிற்கிறது. இன்னும் 158 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இந்திய அணி இன்று 3-வது நாளில் விளையாடும்.

டிராவிட்டின் சாதனையை சமன் செய்தார், ராகுல்

இந்திய வீரர் லோகேஷ் ராகுல், இந்த தொடரில் இதுவரை 13 கேட்ச் செய்துள்ளார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக கேட்ச் செய்த இந்திய பீல்டர் என்ற சிறப்பை தன்வசம் வைத்துள்ள ராகுல் டிராவிட்டின் (2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் 13 கேட்ச்) சாதனையை ராகுல் சமன் செய்தார். அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக கேட்ச் செய்த பீல்டர் என்ற சாதனைக்கு ராகுல் சொந்தக்காரர் ஆனார்.

இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆண்டர்சன்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், புஜாரா மற்றும் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்திய போது இந்தியாவுக்கு எதிராக அவரது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 107 ஆக (27 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை சாய்த்த பவுலர் என்ற மகத்தான பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 105 விக்கெட்டுகள் (22 டெஸ்ட்) கைப்பற்றியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

ரவீந்திர ஜடேஜாவின் ஆசை

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில், ‘மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு வடிவிலான போட்டியில் மட்டும் விளையாடும் போதும், கடினமாக இருக்கிறது. ஏனெனில் போட்டிகளுக்கு இடையே நிறைய இடைவெளி ஆகி விடுவதால் சர்வதேச அனுபவம் குறைந்து விடுகிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் விரைவில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் இடம் பிடிக்க முடியும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது பிரதான இலக்கு’ என்றார்.