ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை ஓசமா என அழைத்தனர்: இங்கிலாந்து வீரர் மோயின் அலி வேதனை


ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை ஓசமா என அழைத்தனர்: இங்கிலாந்து வீரர் மோயின் அலி வேதனை
x
தினத்தந்தி 15 Sep 2018 8:00 AM GMT (Updated: 15 Sep 2018 8:14 AM GMT)

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை ஓசமா என அழைத்தனர் என்று இங்கிலாந்து வீரர் மோயின் அலி தெரிவித்துள்ளார்.

லண்டன்,

ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னை ஓசமா என அழைத்ததாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மோயின் அலி தெரிவித்தது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மோயின் அலி, சுய சரிதை புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்தான் இந்த தகவலை மோயின் அலி தெரிவித்துள்ளார். 

மோயின் அலி தெரிவித்து இருப்பதாவது :- கடந்த 2015 ஆம் ஆண்டு  நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கார்டிப் நகரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் நான் பேட் செய்து கொண்டு இருந்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள்  இருவர், என் பக்கமாக திரும்பி, இந்த ஓசாமை சீக்கிரம் எடுக்க வேண்டும் (அவுட் ஆக்க வேண்டும்) என பேசினர். இதைக்கேட்ட நான் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றேன். கிரிக்கெட் களத்தில் இதுநாள் வரை இப்படி ஒரு கோபம், நான் அடைந்தது இல்லை.  இந்த பிரச்சினை ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லீமனிடம்  சென்றது. 

லீமனும் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களை அழைத்து, நீங்கள் அவ்வாறு அழைத்தீர்களா? என வினவினார். ஆனால், இதை மறுத்த இரு வீரர்களும், பகுதி நேர பேட்ஸ்மேனை அவுட் ஆக்குமாறு மட்டுமே கூறினேன் என்றனர். இந்த பிரச்சினையால் தொடர் முழுவதும் நான் மன உளைச்சலிலேயே இருந்தேன்” இவ்வாறு மோயின் அலி தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான புகாரை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்வோம். களத்தில் இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நடைபெற்றது என்றால், அதை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். கிரிக்கெட்டில் இது போன்ற கருத்துக்களுக்கு இடம் இல்லை. இந்த பிரச்சினை குறித்து கூடுதல் விவரங்களை பெற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளது. 


Next Story