கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல் + "||" + Asian Cup Cricket: Pakistan-Hong Kong Confrontation Today

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.

துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான்–ஹாங்காங்

6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2–வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக விளங்குகிறது. அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உள்ளூர் போன்றது. இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அனுபவம் இல்லாத ஹாங்காங்கை பாகிஸ்தான் துவம்சம் செய்வதற்கு ஆயத்தமாக உள்ளது. முதலில் பேட் செய்தால் 300 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014–ம் ஆண்டில் சர்வதேச ஒரு நாள் போட்டி அந்தஸ்து பெற்ற கத்துக்குட்டி அணியான ஹாங்காங் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த அந்தஸ்தை பறிகொடுத்தது. இருப்பினும் தகுதி சுற்றில் எழுச்சி பெற்ற ஹாங்காங் அணி, சிங்கப்பூர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி அதன் மூலம் ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

பேட்டிங்கில் கேப்டன் அன்சூமான் ராத், பாபர் ஹயாத், நிஜாகட் கான் ஆகியோரைத் தான் ஹாங்காங் மலை போல் நம்பி இருக்கிறது. முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க ஹாங்காங் ஆர்வம் காட்டினாலும், 50 ஓவர்களை முழுமையாக தாக்குப்பிடித்தாலே பெரிய வி‌ஷயமாக இருக்கும். ஏற்கனவே பாகிஸ்தானை இரண்டு முறை சந்தித்து, இரண்டிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாம் உல்–ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ‌ஷதப் கான், முகமது அமிர், ஜூனைத் கான் அல்லது ‌ஷகீன் அப்ரிடி.

ஹாங்காங்: அன்சூமான் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கின்ஜித் ஷா, கிறிஸ்டோபர் கர்டர், இசான் கான், அய்ஜாஸ் கான், ஸ்காட் மெக்கெச்னி, தன்விர் அப்சல், இசான் நவாஸ், நதீம் அகமது, நிஜாகட் கான்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.