மொயீன் அலியை ‘ஒசாமா’ என்று ஆஸ்திரேலிய வீரர் விமர்சித்ததாக புகார் கிரிக்கெட் வாரியம் விசாரணை


மொயீன் அலியை ‘ஒசாமா’ என்று ஆஸ்திரேலிய வீரர் விமர்சித்ததாக புகார் கிரிக்கெட் வாரியம் விசாரணை
x
தினத்தந்தி 15 Sep 2018 10:00 PM GMT (Updated: 15 Sep 2018 8:05 PM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.

சிட்னி, 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.

சுயசரிதை புத்தகத்தில்....

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் தன்னை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்டு இனவெறியுடன் அவமதித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 31 வயதான மொயீன் அலி பிறந்தது, வளர்ந்தது எல்லாமே இங்கிலாந்தில் தான் என்றாலும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர். இங்கிலாந்து அணிக்காக 2014–ம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் அவர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:–

2015–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கார்டிப்பில் நடந்த முதலாவது டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்றோம். அது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எனது முதல் ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டியாகும். இதில் எனது தனிப்பட்ட செயல்பாடு (மொத்தம் 92 ரன் மற்றும் 5 விக்கெட் எடுத்தார்) மகிழ்ச்சி அளித்தாலும், இன்னொரு சம்பவம் என்னை வெகுவாக பாதித்தது.

ஒசாமா என்று அழைத்தார்

ஆஸ்திரேலிய வீரர் ஒருவர், பீல்டிங் செய்து கொண்டிருந்த என்னை நோக்கி, ‘அதை எடு ஒசாமா’ என்று சொன்னார். அவர் என்னை ஒசாமாவுடன் ஒப்பிட்டு சொன்னதும் அதிர்ச்சிக்குள்ளானேன். என்னால் நான் கேட்டதை நம்பவே முடியவில்லை. எனக்கு கோபத்தில் கன்னம் சிவந்தது. இதற்கு முன்பு கிரிக்கெட் களத்தில் இது மாதிரி கோபமடைந்ததில்லை.

ஆஸ்திரேலிய வீரர் என்னை மோசமாக வசைபாடியதை சக வீரர்கள் சிலரிடமும், எங்களது பயிற்சியாளர் டிரெவோர் பெய்லிசிடமும் சொன்னேன். அவர் அதை அப்போதைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமானின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பயிற்சியாளர் லீமான், சம்பந்தப்பட்ட அந்த ஆஸ்திரேலிய வீரரிடம் ‘மொயீன் அலியை ஒசாமா என்று அழைத்தீர்களா?’ என்று கேட்டதற்கு அந்த வீரர் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்தார். ‘அதை எடுத்துக் கொள்...பகுதி நேர பவுலர்(பார்ட் டைமர்)’ என்று தான் சொன்னேன் என்று விளக்கம் அளித்துள்ளார். எனக்கு ஒசாமா என்ற வார்த்தைக்கும், ‘பார்ட் டைமர்’ என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன? இருந்தாலும் அந்த வீரரின் வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும் அந்த ஆட்டம் முழுவதும் நான் கோபத்திலேயே இருந்தேன்.

இந்த ஆ‌ஷஸ் தொடரை நாங்கள் 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினோம். தொடர் நிறைவடைந்ததும் அந்த ஆஸ்திரேலிய வீரரிடம் மீண்டும் இது பற்றி கேள்வி எழுப்பிய போது அதே போன்றே பதில் அளித்தார்.

இவ்வாறு மொயீன் அலி அதில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய வாரியம் விசாரணை

மொயீன் அலியின் குற்றச்சாட்டை விசாரிக்க தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அது தொடர்பான விவரங்களை உடனடியாக தரும்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘இது போன்ற எல்லை மீறிய விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதற்கு எங்களது விளையாட்டு சமூகத்தில் இடமில்லை. தேசத்திற்காக விளையாடும் போது, எங்களுக்கு என்று மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். எனவே இந்த விவகாரத்தை நாங்கள் ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.’ என்றார். ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் தடையை அனுபவித்து வரும் நிலையில் மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் சர்ச்சையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story