இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திய ரசிகர்கள்!


இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திய ரசிகர்கள்!
x
தினத்தந்தி 17 Sep 2018 12:26 PM GMT (Updated: 17 Sep 2018 12:26 PM GMT)

சூதாட்ட தரகர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திய ரசிகர்கள்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மகளிர் உலக கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் அணிகளை தேர்வு செய்வதற்கான ஐசிசி சாம்பியன் ஷிப் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஆடின.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இலங்கையின் காட்டுநாயகே நகரில் உள்ள FTZ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி 2-1 என தொடரை வென்றது.

இந்த போட்டியினிடையே இந்திய ரசிகர்கள் 5 பேர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரும் போட்டி தொடங்கியதிலிருந்தே போனில் பேசியபடியே இருந்துள்ளனர். இதை கவனித்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தபோது மழுப்பலாக பதிலளித்துள்ளனர்.

இதனால் சூதாட்ட புக்கிகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என சந்தேகித்த அதிகாரிகள், அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story