விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை


விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை
x
தினத்தந்தி 17 Sep 2018 11:00 PM GMT (Updated: 17 Sep 2018 9:30 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், விராட்கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட்கோலி இடம் பெறவில்லை. இங்கிலாந்து தொடரில் தொடர்ச்சியாக விளையாடிய விராட்கோலிக்கு இந்த போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்தது. நம்பர் ஒன் பேட்ஸ்மேனான விராட்கோலி ஆசிய கோப்பை போட்டியில் விளையாடாததால் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த நிறுவனம் சார்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி துசித் பெரேரா, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் மீடியா உரிம ஒப்பந்த விதிமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சிறந்த இந்திய அணியை அனுப்பி இருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடாலடியாக பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ‘சிறந்த இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட வீரரை அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்றோ? அணி தேர்வு குறித்து அறிவுரை சொல்லவோ? ஒளிபரப்பு நிறுவனத்துக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அணி தேர்வு விஷயத்தில் வேறு யாரும் தலையிட முடியாது. இது எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விஷயமாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story