விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன்


விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன்
x
தினத்தந்தி 18 Sep 2018 7:49 AM GMT (Updated: 18 Sep 2018 7:49 AM GMT)

விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும்.இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளையில் நாளை (செப்.19) பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சற்று பின்னடைவாக இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சர்கள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியிருப்பதாவது:- “ விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  விராட் கோலி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மிக வலுவானது. எனவே, இந்தப்போட்டி சவாலானதாக இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும்” என்றார். 

Next Story