கிரிக்கெட்

‘எங்களது பேட்ஸ்மேன்களின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது’ - இலங்கை கேப்டன் மேத்யூஸ் + "||" + "The performance of our batsmen is shocking," said Sri Lanka captain Matthews

‘எங்களது பேட்ஸ்மேன்களின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது’ - இலங்கை கேப்டன் மேத்யூஸ்

‘எங்களது பேட்ஸ்மேன்களின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது’ - இலங்கை கேப்டன் மேத்யூஸ்
‘ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்களின் செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது’ என்று இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் தெரிவித்தார்.
அபுதாபி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை (பி பிரிவு) எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 249 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. ரமத் ஷா (72 ரன்) அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் வீரர்களின் சுழல் ஜாலத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.2 ஓவர்களில் 158 ரன்னில் சுருண்டது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்கா 36 ரன்னும், திசரா பெரேரா 28 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் ரகுமான், குல்பதின் நையிப், முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் வீரர் ரமத் ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்த இலங்கை அணி அடுத்த சுற்று (சூப்பர்-4) வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி முதல் லீக் ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோல்வி கண்டு இருந்தது. இன்னும் ஒரு லீக் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் தங்கள் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறின. சர்வதேச போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது இதுவே முதல்முறையாகும்.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மேத்யூஸ் கருத்து தெரிவிக்கையில், ‘எங்கள் அணியின் ஒட்டுமொத்த மோசமான செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. இதேபோல் தான் முதல் ஆட்டத்திலும் நாங்கள் குறைந்த ரன்களில் முடங்கினோம். எல்லா துறைகளிலும் எங்களை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். ஓரளவு நல்ல தொடக்கம் கண்டாலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவு ஏற்பட்டது. எங்களது பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள். பீல்டிங்கும் முந்தைய ஆட்டத்தை விட முன்னேற்றம் கண்டு இருந்தது. தோல்விக்கு பேட்ஸ்மேன்களை தான் குறை சொல்லி ஆக வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பிற்பகுதியில் நன்றாக விளையாடினோம். ஆனால் இங்கு எங்களது பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான தவறுகளை செய்ததுடன், நெருக்கடியையும் திறம்பட கையாளவில்லை’ என்று தெரிவித்தார்.

வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கார் ஆப்கன் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் திட்டத்தை சரியாக அமல்படுத்தினார்கள். பீல்டிங் மற்றும் பவுலிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். எங்களது பீல்டர்களுக்கே எல்லா பாராட்டும் சாரும்’ என்று கூறினார்.