‘டோனியால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறியது’ இந்திய வீரர் கேதர் ஜாதவ் சொல்கிறார்


‘டோனியால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறியது’ இந்திய வீரர் கேதர் ஜாதவ் சொல்கிறார்
x
தினத்தந்தி 20 Sep 2018 11:28 PM GMT (Updated: 20 Sep 2018 11:28 PM GMT)

‘டோனியால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறியது’ என்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் கேதர் ஜாதவ் தெரிவித்தார்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நொறுக்கித்தள்ளியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்னில் அடங்கியது. இந்த இலக்கை இந்திய அணி 29 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், எங்களது தொடக்கம் சரியில்லை. முதல் 5 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்ததால் சரிவில் இருந்து மீண்டு வர முடியவில்லை. பாபர் அசாம் தவிர மற்ற எல்லோரும் விக்கெட்டை சாதாரணமாக இழந்து விட்டோம். இந்திய அணியின் 2 பிரதான பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள தயாராகி இருந்தோம். கேதர் ஜாதவ் பந்து வீச்சை கவனத்தில் கொள்ளவில்லை. இது எங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். சூப்பர்-4 சுற்றில் அவரது பந்து வீச்சுக்கு ஏற்றபடியும் எங்களை தயார்படுத்தி கொள்வோம்’ என்றார்.

3 விக்கெட்டுகள் சாய்த்து பாகிஸ்தான் அணியின் சரிவுக்கு காரணமாக விளங்கிய 33 வயதான இந்திய அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் அளித்த பேட்டியில், ‘உண்மையை சொல்லப்போனால் வலைப்பயிற்சியின் போது நான் பெரிய அளவில் பந்து வீசி பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஒன்றிரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீசி பார்த்தேன். பந்து வீச்சில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தினால் முழு நேர பவுலராக உருவெடுக்க முடியும் என நினைக்கிறேன். அப்படி செய்தால் தற்போதைய எனது நிலையை (ஆல்-ரவுண்டர்) இழக்க நேரிடலாம். பந்து வீச்சை பொறுத்தவரை எனக்கு என்று ஒரு எல்லை வைத்து இருக்கிறேன்.

2016-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அப்போதைய கேப்டன் டோனி என்னை பந்து வீசும் படி பணித்தார். அது முதல் எனது கிரிக்கெட் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. அவரால் தான் பந்து வீச்சு மீது எனக்கு நம்பிக்கை வந்தது. பேட்ஸ்மேனை கணித்து பந்து வீச முயற்சிப்பேன். எப்பொழுதும் ஸ்டம்பை குறி வைத்து பந்து வீசுவது தான் எனது வாடிக்கையாகும். எதிரணி பேட்ஸ்மேன் ரன் எடுத்தால் பரவாயில்லை. பந்தை அடிக்காமல் தவறவிட்டால் எனக்கு விக்கெட் கிடைக்கும்’ என்று கூறினார்.

Next Story