இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? சூப்பர்-4 சுற்றில் வங்காளதேசத்துடன் இன்று மோதல்


இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? சூப்பர்-4 சுற்றில் வங்காளதேசத்துடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 20 Sep 2018 11:33 PM GMT (Updated: 20 Sep 2018 11:33 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் உள்ள இந்திய அணி சூப்பர்-4 சுற்றில் இன்று வங்காளதேசத்துடன் மோதுகிறது.

துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்று இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும.

சூப்பர்-4 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் ஹாங்காங்கை 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 162 ரன்களில் சுருட்டி புரட்டியெடுத்தது. அதே உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வங்காளதேசத்தையும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளனர். காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கலீல் அகமது அல்லது மனிஷ் பாண்டே சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

மெதுவான தன்மை கொண்ட துபாய் ஆடுகளத்தில் பொறுமையுடன் செயல்படுவது மிகவும் முக்கியமானது. கொஞ்சம் நிலைத்து நின்று விட்டு அதன் பிறகு மட்டையை சுழட்டினால் கணிசமான ரன்கள் குவிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் அசத்தினர். அதே போன்று இன்றைய ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் முத்திரை பதித்து வெற்றிப்பயணத்தை தொடர்வார்களா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

லீக் சுற்றில் முன்னாள் சாம்பியன் இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த வங்காளதேசத்தை துளியளவும் குறைத்து மதிப்பிட முடியாது. 2016-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வங்காளதேசம் இறுதி சுற்றுவரை வந்து இந்தியாவிடம் தோற்றது நினைவிருக்கலாம். அந்த அணியில் காயத்தால் தமிம் இக்பால் விலகியது பின்னடைவாகும். இருப்பினும் இலங்கைக்கு எதிராக 144 ரன்கள் குவித்த முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா, முகமத் மிதுன் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் தான் அந்த அணிக்கு பேட்டிங் தூண்களாக விளங்குகிறார்கள். பந்து வீச்சில் கேப்டன் மோர்தசா, முஸ்தாபிஜூர் ரகுமான், மெஹிதி ஹசன் ஆகியோர் அச்சுறுத்தும் அளவுக்கு திறன் படைத்தவர்கள். ஆனால் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி லீக்கில் ஆடிய அவர்கள் மறுநாளே (அதாவது இன்று) களம் இறங்குவது தான் வங்காளதேசத்துக்கு சற்று பாதகமான விஷயமாக தென்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 33 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 27-ல் இந்தியாவும், 5-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கலீல் அகமது அல்லது மனிஷ் பாண்டே.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், மொமினுல் ஹக், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், மக்முதுல்லா, மோசடெக் ஹூசைன், மெஹிதி ஹசன் மிராஸ், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

அபுதாபியில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, அஸ்கார் ஆப்கன் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தானே வெற்றி கண்டிருக்கிறது. இந்த ஆட்டமும் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

Next Story