கிரிக்கெட்

புதிய புயல்... கலீல்! + "||" + New storm... Khaleel!

புதிய புயல்... கலீல்!

புதிய புயல்... கலீல்!
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு படையில் புதிதாக இணைந்திருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், கலீல் அகமது.
னது முதல் சர்வதேசப் போட்டியிலேயே முத்தாய்ப்பாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக் கிற இந்த இடதுகை வேகப்புயலைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...

ராஜஸ்தான் மாநிலம் ‘டோங்க்’கில் பிறந்தவர், கலீல். தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறு நகரம், டோங்க். முலாம்பழங்களுக்குப் பெயர் பெற்ற ஊர் இது.

மருத்துவமனை ஒன்றில் காம்பவுண்டராக பணிபுரியும் கலீலின் தந்தை குர்ஷீத்துக்கு ஆரம்பத்தில் இவரின் கிரிக்கெட் ஆர்வத்தில் ஈர்ப்பில்லை. மகன் எந்த அளவுக்கு கிரிக்கெட்டை நேசித்தாரோ அந்த அளவுக்கு தந்தை கிரிக்கெட்டை வெறுத்தார்.

கலீலின் கிரிக்கெட் ஆர்வம், அவரது படிப்பைப் பாதிக்கும் என தந்தை நினைத்தார். கலீலின் பயிற்சியாளர் இம்தியாஸ் அலிகான்தான் இவருக்குள் உள்ள கிரிக்கெட் திறமையைப் பற்றி எடுத்துரைத்து தந்தையை சமாதானப்படுத்தினார்.

எல்லா குட்டி கிரிக்கெட் வீரர்களையும் போல கலீலும் ஆரம்பத்தில் டென்னிஸ் பந்தில்தான் பந்து வீசினார். அதுதான் தான் ஒரு வேகப்பந்து வீச்சாளராக உதவியது என்று இவர் கூறுகிறார். சிமெண்ட் தரையில் டென்னிஸ் பந்து வீசிப் பழகியது தனக்குக் கைகொடுத்தது என்கிறார் இவர்.

இந்தியா சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறார், கலீல் அகமது. குழம்பாதீர்கள். இவர் ஆடியது, 2016-ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில். அப்போது அணியின் கேப்டனாக இருந்தவர் இஷான் கிஷன். உலகக் கோப்பை தொடரில் 6 ஆட்டங்களில் ஆடிய கலீல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டலில் வளர்ந்துவந்த கலீல், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற 2016-ம் ஆண்டிலேயே டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஐ.பி.எல்.லில் ஆடும் வாய்ப்பைப் பெற்றார். அப்போது இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ. 10 லட்சம்.

ஆனால் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 3 கோடி என்ற அதிரடி தொகைக்கு கலீலை விலைக்கு வாங்கியது. ஐ.பி.எல். போட்டி மூலமாக, வெள்ளைப் பந்தில் வீசும் அனுபவம் கலீலுக்கு கிட்டியது.

கடந்த ஆண்டு சீசனில் ராஜஸ்தான் சார்பில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகம் ஆனார் கலீல். அக்டோபரில் முதல் தரப் போட்டிகளிலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளிலும் முதல்முறையாகப் பிரவேசித்தார்.

இந்தியாவின் வருங்கால அதிவேக வீச்சு நம்பிக்கைகளில் ஒருவரான கலீலின் சிறப்பு, எந்த வகை ‘பிட்ச்’சிலும் பவுன்ஸ் செய்வது. நல்ல வேகம், ஸ்விங் ஜாலம் காட்டுவார். இந்த ஆண்டு முஸ்டாக் அலி கோப்பை தொடரில் அதிகபட்சமாக மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் பந்து வீசிக் கலக்கினார், கலீல்.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற நாற்கரத் தொடரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் நான்காவது இடம் கலீலுக்கு. இவர் 4 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக அறிமுகம் செய்யப்பட்ட ஜெய்தேவ் உனட்கட், பரீந்தர் ஸ்ரன் ஆகியோர் பெரிதாக சோபிக்காது போக, தேர்வாளர்கள் பார்வை 20 வயது கலீல் அகமது பக்கம் திரும்பியிருக்கிறது.

‘இந்திய அணியில் இன்னும் 2- 3 வீரர்களுக்கான இடம் உறுதியாகவில்லை. அதில், ஓர் இடதுகை வேகப் பந்துவீச்சாளருக்கான இடமும் ஒன்று. அதற்குத்தான் நாங்கள் கலீலை எதிர்பார்க்கிறோம்’ என்கிறார், இந்திய அணி தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்.

தனது கிரிக்கெட் வளர்ச்சியில் டிராவிட்டுக்கு முக்கிய இடம் இருப்பதாகக் கூறும் கலீல், அடுத்த இடத்தைக் கொடுத்திருப்பது ஜாகீர் கானுக்கு. தனது பந்துவீச்சில் ஜாகீரின் தாக்கம் அதிகம் இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி யில் ஆடியபோது, தொழில்நுட்ப ரீதியிலான தனது சில பிரச்சி னைகளைச் சரிசெய்ய ஜாகீர் உதவினார் என்கிறார், கலீல்.

இவர்கள் இருவருக்குப் பின், மற்றோர் இந்தியப் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் தனக்கு வழிகாட்டியதாகக் கூறுகிறார் கலீல். கடைசிக்கட்ட ஓவர்களில் எப்படி பந்து வீசுவது என்று புவனேஸ்வரிடம் கற்றதாக இவர் சொல்கிறார்.

இந்திய அணிக்கு தான் தேர்வு பெற்ற மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறும் கலீல் அகமது, அந்தத் தகவல் அறிந்ததும் தனது தந்தை கட்டி அணைத்து வாழ்த்தியதே பெரிய பாராட்டு என்கிறார்.