கிளப் போட்டிகளில் வார்னர், சுமித் ரன் குவிப்பு


கிளப் போட்டிகளில் வார்னர், சுமித் ரன் குவிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 7:28 PM GMT)

கிளப் போட்டிகளில் வார்னர், சுமித் ஆகியோர் ரன் குவித்து அசத்தினர்.

சிட்னி,

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மீதான தடை மார்ச் மாதம் முடிவுக்கு வருகிறது. ஆனாலும் கிளப், லீக் வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்கள்.

சிட்னியில் நேற்று தொடங்கிய கிளப் கிரிக்கெட் போட்டியில் இருவரும் களம் இறங்கி அசத்தினர். செயின்ட் ஜார்ஜ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரான்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் 155 ரன்கள் குவித்தார். அவரது சதத்தின் உதவியுடன் ரான்ட்விக் அணி 278 ரன்கள் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போல் மோஸ்மான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுதர்லாண்ட் கிளப்புக்காக களம் கண்ட ஸ்டீவன் சுமித் 85 ரன்கள் (92 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும் அவரது அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ‘சுமித் மீண்டும் விளையாடுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் களம் இறங்கிய போது, ஒவ்வொரு ரசிகர்களும் ஆதரவு அளித்தனர்’ என்று சுதர்லாண்ட் அணியின் மற்றொரு வீரர் வாட்சன் தெரிவித்தார்.

Next Story